சரண கோஷம் விண்ணைப்பிளக்க சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காட்சியை பக்தர்கள் தரிசித்தனர் 


பொன்னம்பல மேட்டுல் ஜோதியாக காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 30ல் திறக்கப்பட்டது. 


மகர ஜோதி: 


பத்தனம்திட்டா (கேரளா) மலை உச்சியில் உள்ள சபரிமலை கோவிலில் இன்று மகர ஜோதியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற பக்தர்களின் கோஷத்தால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. ஜோதி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலையில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணி முதல் 8 மணிவரை மகர ஜோதி தரிசனம் செய்யப்படவுள்ளது.ஜோதி தரிசனம் காண தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்ப மாலை அணிந்து வந்து தரிசனம் செய்தனர்.


மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், அதை தரிசிக்க, சபரிமலை கோயில் நிர்வாகம்  சார்பில் 10 காட்சி முனைகளை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புலிமேடு, பருந்தும்பாறை, பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளிலும் தரிசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு பகுதிகளில் 8 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 1400 போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 மகர ஜோதி தெற்கு மக்களிடையே பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. மகரஜோதியை தரிசிப்பது நல்ல அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவருவதாக பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.


3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி: 


மகர விளக்கு பூஜை தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். இந்த திருவாபரணங்கள் நேற்று முன்தினம் அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது.


பின்னர் நேற்று 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பாரம்பரிய பெரு வழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக இன்று மதியம் பம்பை வந்தடைந்தது.


அதன்பின்னர் அங்கிருந்து பக்தர்கள் சூழ நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.  திருவாபரணப் பெட்டிக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து 18 ஆம் படி வழியாக சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.  இந்த தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம்.


ஜோதி வடிவில் சாமி  காட்சியளிப்பதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வுக்காக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வர். அதேபோல், இந்தாண்டும் சபரிமலையில் ’சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷத்தில் மூழ்கியது.