தஞ்சாவூர்: தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஆதிசேஷன் வழிபட்டு இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.



கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும், ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார். சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.

கும்பகோணத்திலுள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுவது நாகேஸ்வர சுவாமி கோவிலாகும்.  "குடந்தைக் கீழ்க்கோட்டம்" என இது குறிப்பிடப்படுகிறது.   குடந்தை கீழ்கோட்டம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருக்கோவில்.   இத்திருக்கோவிலில் 40 கல்வெட்டுகள் உள்ளன.  தென்காசி திருக்கோவிலை கட்டிய பராக்கிரம  பாண்டியன்(கிபி 1411-1463) ஒரு கல்வெட்டு அமைத்துள்ளான்.

இந்த நூற்றாண்டில் பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் என்னும் மகான், தம் கழுத்தில் பித்தளை சொம்பு (உண்டியல்)  கட்டிக்கொண்டு பிச்சை எடுப்பது போல் சிறுக சிறுக பொருள் சேர்த்து, புதர் மண்டிக் கிடந்த  இக்கோவிலை திருப்பணி செய்து 1923 ஆம் ஆண்டு கும்பாபிஷகம் செய்து வைத்தார்.





இக்கோவிலின் மூல லிங்கத்தில் சூரியனது கதிர்கள் சித்திரை மாதத்தில் 11, 12, 13 தேதிகளில் விழும்படியாகக் கருவறை கட்டப்பட்டுள்ளது.  நாகேஸ்வர சுவாமி கோவிலின்  சிறப்புமிக்க அம்சம், இங்குள்ள நடராசர் சந்நிதி முன்னுள்ள மண்டபம் ஆகும்.  இம்மண்டபத்தின்  இரு பக்கங்களிலும் பெரிய கல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.  2 குதிரைகள்,  யானைகள், பாகர்களுடன் ஸ்ரீ நடராசர் இம்மண்டபத்தை இழுத்துச் செல்வதுபோல்  காட்சியளிக்கிறது.  தேரின் அமைப்பைக் கொண்டுள்ள இம்மண்டபம் ஒரு உயரிய கலைப்படைப்பு  ஆகும்.

பல்வேறு  சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டிற்குரிய விழா கடந்த 26ம் தேதி நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடியுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.  இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நேற்று காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.