பழனி முருகன் கோவில்:
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடானது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். உலகப்புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வருவதுண்டு.
இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் இருப்பதால் இங்கு வந்து வழிபட்டு தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். ஆண்டுதோறும் பழனி மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி, தைப்பூசம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அந்த வகையில் தற்போது கார்த்திகை தீப திருவிழாவிற்கான முக்கிய நிகழ்வு நேற்று நடைபெற்றது.
காப்பு கட்டும் நிகழ்வு:
திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி மாலை சாயரட்சை பூஜை முடிந்த பின் அருள்மிகு சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு தீபாராதனை காட்டபட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்த துவாரபாலகர் , மயிலுக்கு காப்பு கட்டபட்டது. அடுத்த 7 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் பரதநாட்டியம் , திருப்பம் தரும் திருப்புகழ், அலங்காரத்தில் அழகன், பக்தி இன்னிசை பக்தி சொற்பொழிவு மலைக்கோவிலில் நடைபெறும் என அறிவிப்பின்படி அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
13 ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு விஸ்வரூப தரிசனம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், 6 மணிக்கு மலைக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 13ம் தேதி மதியம் 2 மணி அளவில் மாலை 6 மணி வரைக்கும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது ,
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
தீபத்திருவிழாவில் பக்தர்கள் தரிசனம்
இதனை தொடர்ந்து நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கப் பனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவில் பரணி தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டதை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபட்டனர். பழனி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திலும் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் மாரிமுத்து தலைமையிலான கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.