அரசுப் பணிகளில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளைத் திருத்த, டிஎன்பிஎஸ்சி மிகக் குறைவான நாட்களே எடுத்துக்கொண்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.


விரைவாக வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி


இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ குடிமைப் பணிகளில்‌ உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும்‌ பொருட்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வுகளை நடத்தி வருகிறது.


விரைவாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் தேர்வர்களின்‌ நலன்‌ கருதியும்‌, தெரிவுப் பணிகளை விரைவுபடுத்தவும்‌, 2024-ம்‌ ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வுகளின் முடிவுகள்‌ 2022-ம்‌ ஆண்டை ஒப்பிடுகையில்‌ விரைவாக வெளியிடப்‌பட்டுள்ளன.






ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு- (குரூப் 1 பணிகள்‌)-க்கான முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ 33 வேலை  நாட்களுக்கு உள்ளும்‌, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு (குரூப் 2 மற்றும்‌ 2 ஏ பணிகள்‌)-க்கான முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகள்‌ 57 வேலை நாட்களுக்குள்ளும்‌, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு- (குரூப் 4 பணிகள்‌)-க்கான தேர்வு முடிவுகள்‌ 92 வேலை நாட்களுக்கு உள்ளும்‌ வெளியிடப்‌பட்டுள்ளன'' என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர்‌ கோபால சுந்தர ராஜ் ‌தெரிவித்துள்ளார்.


முன்னதாக நேற்று மாலை குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. ஏற்கெனவே டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மாதத்தின் முதல் பாதியிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 


33 நாட்களிலேயே தேர்வு முடிவுகள்


அதேபோல குரூப் 4 தேர்வு முடிவுகளும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விரைவாக வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக குரூப் 1 தேர்வு முடிவுகள் வெறும் 33 நாட்களிலேயே வெளியிடப்பட்டன. 


முழு வீச்சில் பணி


டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்ட பிறகு, தேர்வு பணிகள் முழு வீச்சில் வேகமெடுத்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.