பழனி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சிலைக்கு மருந்து சாத்தப்படும் எனவும், அதற்கான கருத்துக்கள் கேட்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுனர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு பாலாலயம் நடைபெற்றது. இதனையொட்டி கோயில் கட்டிடங்கள், பதுமைகள் மற்றும் கோயில் கோபுரங்கள் ஆகியவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழனி மலையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் நவபாஷாணங்களை கொண்டு செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண சிலையே மூலவராக உள்ளது.
இந்நிலையில், பழனி கோயில் மூலவர் திருமேனிக்கு முறைப்படி செய்யவேண்டிய திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற உயர்நீதி அரசர் பொங்கிலியப்பன் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் மருதாச்சலம் அடிகளார், கோவை சிரவை ஆதீனம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில் குமார், பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன், பழனி நகர் மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பதினைந்து பேர் உள்ளனர்.
இந்த நவபாஷாண சிலை பாதுகாப்பு வல்லுனர் குழுவினர் நேற்று பழனி மலைக்கோயிலில் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினர். அப்போது வல்லுனர் குழு தலைவர் நீதியரசர் பொங்கிலியப்பன் தெரிவித்ததாவது:- பழனி மலைக்கோயில் உள்ள நவபாஷாண சிலை குறித்து குழுவினருடன் ஆலோசிக்கப்பட்டு அவர்களது கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் மூலவர் சிலை மற்றும் உற்சவர் சிலைகளில் ஏதாவது சேதம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், கருவறைக்குள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மூலவர் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தப்படுவது உறுதி என்றும், காலம் காலமாக நடைபெறும் விதிமுறைகளின் படி ஆகம விதிகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் விரைவாக செய்து கும்பாபிஷேகம் நடப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பழனி மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுனர் குழுவில் பழனி கருவறைக்குள் செல்ல உரிமையுள்ள சிருங்கேரி மடாதிபதி மற்றும் போகர் சித்தரின் சீடரான புலிப்பாணியின் வம்சமான தற்போதைய பழனி புலிப்பாணி ஆதீனம் ஆகியோரை சேர்க்காதது இந்து அமைப்பினரிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கருவறைக்குள் செய்யும் பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வல்லுனர் குழுவினர் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்