சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகளை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அம்மாபேட்டையில் குவிந்தனர்.


வண்டி வேடிக்கை நிகழ்ச்சி:


ஐந்து தலை நாகத்தில் சிவன், பார்வதி, அம்மன், மயில் வாகனத்தில் முருகன், விநாயகர், கண்ணன், ராதை, ராமன், சீதை, அனுமன் உள்ளிட்ட தேவலோக கடவுள்களின் ஒப்பனை புரிந்தவர்கள் அலங்கார வாகனங்களில் அணிவகுத்து வந்த காட்சி பார்வையாளர்களை பரவசமடைய செய்தது. இதேபோல் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ராமாயண காட்சிகள், கைலாய காட்சிகள், காந்தாரா திரைப்படத்தில் வந்த வராகி அம்மன் வேடம் உள்ளிட்ட வாகனங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.


கடவுள் வேடமிட்ட நபர்களுடன் பக்தர்கள் செல்பி எடுத்த மகிழ்ந்தனர். மேலும் செண்டை மேளம் முழங்க பார்வதி நடனம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன. இது தவிர நெருப்பு வளையம் தாண்டுதல் உள்ளிட்ட வீர சாகச நிகழ்ச்சிகளும் திருவிழாவில் இடம் பெற்றிருந்தன. மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் அம்மாபேட்டை ரவுண்டானாவில் இருந்து தொடங்கி காந்தி மைதானம், புகையிலை மண்டி, ஜோதி தியேட்டர் வழியாக சென்று, அம்மாபேட்டை ரவுண்டானா பகுதியில் விரைவடைந்தது.


சிறப்பு அலங்கார வாகனங்கள்:


இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வண்டி வேடிக்கை விழாவினை கண்டுகளித்தனர். வண்டி வேடிக்கை நிகழ்ச்சிக்காக கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து சிறப்பு அலங்கார வாகனங்கள் அழைத்து வரப்பட்டிருந்தது. மேலும் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நவீன வண்ண விளக்குகளுடன் கூடிய ஸ்பீக்கர் அமைக்கப்பட்டு திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டது.



களைகட்டிய ஆடி திருவிழா:


சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் ஆடித் திருவிழா களைகட்டியுள்ளது. தீமிதித்தல், அலகு குத்துதல், கரகாட்டம், வான வேடிக்கை, வண்டி வேடிக்கை என சேலம் மாநகரம் முழுவதும் வைபவங்களும் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றது. சேலம் மாவட்ட செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள அருள்மிகு செவ்வாய்பேட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருத்தேர் விழா நேற்று நடைபெற்றது.


மாரியம்மன் திருக்கோவில் திருத்தேரினை மங்கள வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரடி பகுதியில் தொடங்கி அப்பு செட்டி தெரு, மாரியம்மன் கோவில் தெரு வழியாக முக்கிய வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட தேரோட்ட வைபவத்தை வழியெங்கிலும் பக்தர்கள் கண்டு அம்மனை வழிபட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 18 பட்டிக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப் பண்டிகை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.



சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் கடந்த 25 - ஆம் தேதி பூச்சாட்டுகள் விழா மிகச் சிறப்பாக தொடங்கியது. இதன்பின் 7 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் 9 -ஆம் தேதி விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் பசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.