“2024” - கும்ப ராசி வருட பலன்


 கும்ப ராசி கால புருஷ தத்துவத்திற்கு லாபகரமான வீடு.  உங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பலனை இரண்டாகப் பிரிக்கிறேன்.  வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் ஒருவிதமான பலனும் எஞ்சிய ஒன்பது மாதங்கள் வேறு விதமான பலன்களும் நடக்கப் போகிறது. 


வருடத்தின் முதல் 3 மாதங்கள்


 2024 ஆம் ஆண்டு வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் உங்களுக்கு மூன்றாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து உங்களுடைய  லாபத்தையும்  உங்களுக்கான அனைத்து சௌகரியங்களையும் வாரி வழங்கப் போகிறார்.  கால புருஷனுக்கு பதினோராம் வீடான கும்பத்தில் பிறந்தவர்கள் நிச்சயமாக அனைத்து சகோதரங்களையும் பெருக்கும்போதே வைத்திருப்பவர்களாக இருப்பார்கள்.


உங்களுக்கு வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் மூன்றாம் பாவத்தில் அமர்ந்த குருபகவான் உங்கள் என் ராசியில் ஒன்பதாம் பாவத்தையும் 11 ஆம் பாவத்தையும் ஏழாம் பாவத்தையும் பார்வையிட போகிறார். நிச்சயமாக இது உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டகரமான  ஆண்டாகவே அமையப்போகிறது.  உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகு பகவான் எட்டாம் இடத்தில் கேது பகவானும் அமர்ந்து உங்களுக்கு சில சில குடும்பத்தில் சலசலப்புகளை கொடுத்தாலும், நிச்சயமாக குடும்பத்தை ஒன்று சேர்க்கும் முயற்சியில் உங்களை வைத்து முன்னெடுத்து அந்த பிரச்சனையை தீர்க்கச் செய்வார்.  கும்ப ராசி ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் நீண்ட தூர பிரயாணம், ஆன்மீகத்தில் ஈடுபாடு, கோவில் வழிபாடு,  குலதெய்வ நேர்த்திக் கடன் போன்ற சுப காரியங்களில் உங்களை ஈடுபடச் செய்வார்.   அனைத்து கிரகங்களும் உங்களுக்கு சாதகமாக அமைவதால் நிச்சயமாக சம்பாதிப்பதற்கு  அதிக முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின்  உழைப்பு வெற்றியை தருவதற்கான வாசலை திறந்து கொடுக்கும். 


 ஜென்ம சனி :


ஜென்ம சனி என்றாலே அனைவருக்கும் ஒருவித படபடப்பும் பயமும் இருக்கும். சனிபகவான் உங்களை என்ன செய்யப் போகிறாரோ என்ற மிகப்பெரிய அச்சமும் இருக்கலாம். கவலை வேண்டாம். உங்களுடைய ராசி அதிபதி சனி பகவான் ராசியிலே அமருவதால் உங்களுக்கு எடுத்த கருத்தில் ஜெயத்தை கொடுப்பார். ஆனால் சற்று தாமதமாக கொடுப்பார்.  ஜென்ம சனி  என்னவென்று சற்று பார்க்கலாம்.


நீங்கள் வேலை ஸ்தளத்தில் ஒரு வேலையை செய்ய முயற்சி செய்கிறீர்கள் என்றால், அதற்குள்ளாகவே உங்களின் மேல் அதிகாரியோ அல்லது சக ஊழியர்களோ, ஏன் இன்னும் அந்த வேலையை முடிக்கவில்லை என்று  உங்களைக் கேள்வி கேட்க கூடும். அது மட்டுமல்ல உங்களின் குடும்பத்தார்  உங்களை சற்று மந்தமானவராகவே பார்க்கக்கூடும்.  ஆனால் நிச்சயமாக நீங்கள் மந்தமானவர் கிடையாது. எடுத்த காரியத்தில் வில்லில் இருந்து புறப்படுகின்ற  அம்பு போல தெளிவான வேலையை செய்தாலும் மற்றவர்களின் பார்வைக்கு நீங்கள் மந்தமாக அந்த வேலையை செய்வது போல ஒரு மாயத் தோற்றத்தை சனி பகவான் ஏற்படுத்துவாரே தவிர, அதனால் மிகப்பெரிய இறக்கமான சூழலை நீங்கள் அனுபவிக்கப் போவதில்லை.  சனிபகவானின் தீமையான பார்வையிலிருந்து தப்பிக்க நவகிரகத்தில் இருக்கும் சனி பகவானுக்கு வாரம் தோறும் சனிக்கிழமை நெய் தீபம் போட்டு வர உங்களின் பிரச்னை அகலும்.


 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை: 


 2024 ஆம் ஆண்டு மே மாதம் கும்ப ராசிக்கு நான்காம் இடத்தில் குரு பகவான் செல்கிறார். நிச்சயமாக வீடு மனை இடம் மாற்றம் உண்டு. நீங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தாலும் சொந்த வீட்டில் குடியிருப்பவராக இருந்தாலும் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு மாறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி தருவார். நீங்கள் ஒருவேளை சொந்த வீட்டில் வசிப்பவராக இருந்தால்  சுற்றுலாவுக்காகவோ  அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடிய சூழ்நிலை உருவாகும். 


குறிப்பாக இதுபோன்ற காலகட்டத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் சில, சில பிரச்சனைகளை சந்தித்து அதன் மூலமாக நீங்கள் வீட்டை விட்டு வெளியே போக நேரலாம். அது போன்ற சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.  உதாரணத்திற்கு நீங்கள் கும்பராசி கணவனாக இருந்தால் உங்கள் மனைவியிடம் கோபித்துக் கொண்டு வேறு இடத்திற்கு  சென்று  தங்க வாய்ப்பு உண்டு.


அதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  நான்காம் இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்கள் ராசியின் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் நிச்சயமாக தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப் போகிறது. எந்த தொழிலை நீங்கள் தொடங்கினாலும் அது வெற்றியில் தான் முடியும். ஏற்கனவே நீங்கள் வேலையில் இருந்தாலும் வேலைத்தளத்தில் மதிக்கப்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற போகிறீர்கள். இதுபோன்ற வேலையை உங்களை விட்டால் செய்வதற்கு ஆளில்லை என்ற எண்ணத்தை உருவாக்க போகிறது.


 இரண்டில் ராகு எட்டில் கேது


 உங்களுடைய கும்ப ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் ராகு பகவான் எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லை என்ற சூழ்நிலையை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும். எட்டில் இருக்கும் கேது பகவான் உங்கள் மனைவியின் குடும்பத்தாரிடமோ அல்லது உங்கள் கணவனின் குடும்பத்தாரிடமோ உங்களை சற்று பிரித்து, வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 


நீங்கள்  மற்றவரிடத்தில் பேசும் போது சற்று கவனமாக பேசுவது நல்லது. உங்களுடைய வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். காரணம் இரண்டில் இருக்கும் ராகு பகவான் நீங்கள் சண்டையில் ஈடுபடும்போது தேவையில்லாத வார்த்தைகளால் அடுத்தவர்களை காயப்படுத்தி அதன் மூலமாக கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், வம்பு வழக்கில் சிக்குவதற்கான சில வாய்ப்புகளை உருவாக்கி தருவார்.  அதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.  அடுத்த ஆண்டு ஏற்ற இறக்கமான பலன்களை நீங்கள் சந்தித்தாலும் பெரும்பாலும் நல்ல பலன்களையே எதிர்கொள்ளலாம். 


 


 அதிர்ஷ்டமான நிறம் :  மஞ்சள், பச்சை 


 அதிர்ஷ்டமான எண் :5, 9


 வணங்க வேண்டிய தெய்வம் :  சனிபகவான்,  ராகு கேது வழிபாடு