தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஒன்றாகும். பழைமையும், சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில் அன்னை காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாக்கள் முக்கியமானவை. அதன்படி இந்த ஆண்டுக்கான ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவிற்காக ஸ்ரீ காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த சனிக்கிழமை மாலை தன் வீடான அம்பாள் சன்னதிக்கு ஏழுந்தருளினார். கொடியேற்ற தினமான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு கஜ பூஜை கோ பூஜை மற்றும் கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.
கொடிமரம் முன்பாக அஸ்திரதேவி வைத்து நவகலசங்கள் வைத்து வழிபாடு நடைபெற்றது. கொடிப்பட்டம் திருக்கோயிலுக்குள் உலா வந்தது. அம்பாள் சன்னதி உற்சவர் மண்டபத்தில் ஸ்ரீ காந்திமதி அம்பாள் சிறப்பாக அலங்காிக்கப்பட்டு இருந்தார், காலை 6.00 மணிக்கு மேல் 7.00 க்குள் அம்பாள் சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர் இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று புதுவஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. கொடிமரத்திற்கு சோடச தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் 10 நாட்களும் தினந்தோறும் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் 1ம் தேதி 4ம் திருநாள் அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நண்பகலிலும், வரும் 7ம் தேதி 10ம் திருநாள் அன்று மாலை காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு திருவிழாவும் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்,