தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான  அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஒன்றாகும். பழைமையும், சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதில்  அன்னை காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூரத் திருவிழா மற்றும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாக்கள் முக்கியமானவை. அதன்படி இந்த ஆண்டுக்கான ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவிற்காக ஸ்ரீ காந்திமதி அம்பாள் சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் தன் வீடான அம்பாள் சன்னதிக்கு ஏழுந்தருளினார். கொடியேற்ற தினத்தன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு கஜ பூஜை, கோ பூஜை  மற்றும் கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.


பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நான்காம் திருநாளில் இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து செப்பு கேடயத்தில் வெண்பட்டு உடுத்தி எழுந்தருளிய காந்திமதி அம்பாள் வளையல் பூட்டுவதற்கு சுவாமி நெல்லையப்பரிடம் அனுமதி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து காந்திமதி அம்பாள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஊஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு வளைகாப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


தொடர்ந்து அம்பாளுக்கு நழுங்கு வைக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக திமுக சார்பில் மாநகரட்சி கவுன்சிலர்கள் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் தலைமையில் வளைகாப்பு நிகழ்வுக்காக வளையல் பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து அம்பாள் முன்பு வைத்தனர். தொடர்ந்து விழாவில்  கலந்து கொண்ட பெண்கள், குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்களை பிரசாதமாக பெற்றுச் சென்றனர். இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான முளைக்கட்டு உற்சவம் வரும் ஏழாம் தேதி இரவில் நடைபெறுகிறது.