Navratri Pooja: நவராத்திரி கொண்டாட்டத்தில் வழிபாட்டு முறைகள் மிகவும் முக்கியமானது, வழிபாட்டின்போது பாடப்படும் பாடலும் அதன் ராகமும் தான். அதேபோல், வழிபாட்டின் போது கடைபிடிக்கும் சடங்குகளும் மிகவும் முக்கியமாக பார்க்கபடுகிறது.
நவராத்திரி கொண்டாட்டம் என்றாலே பாடப்படும் பாடல்களும் அதன் ராகமும் சிறப்பு கவனத்தினைப் பெறுகிறது. தற்போது ஒவ்வொரு நாளிலும் பாடப்படும் பாடலின் ராகம் குறித்து காணலாம். முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் தேவியை நவராத்திரியில் வழிபடுகிறார்கள்.
துர்கை வழிபாடு
நவராத்திரியில் முதல் நாள் வழிபாட்டின் போது, தோடி ராகத்தில் பஜனை பாடலை பாடி தேவியை வழிபடுவது நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில் முதல் நாள் வழிபாட்டில் தோடி ராகத்தில் பாடல்கள் பாடப்படுகிறது. அதேபோல் இரண்டாம் நாள் வழிபாட்டில், கல்யாணி ராகத்தில் தேவியை பற்றி பஜனை பாடல் பாடி வழிபடவேண்டும். மூன்றாவது நாளில், தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.
மகாலட்சுமி வழிபாடு
நான்காவது நாளில், அம்பிகையின் பாடல்களை பைரவி ராகத்தில் பாட வேண்டும். அவ்வாறு பாடி வழிபடுவதால் வீட்டிற்கு நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஐந்தாவது நாளில் பாடப்படும் பஜனைப் பாடலானது, தேவியின் பாடல்களை பந்துவராளி ராகத்தில் பாடி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவது நன்மை ஏற்படுத்தும் என்பது பெரும் நம்பிக்கையாக உள்ளது. நவராத்திரியின் ஆறாவது நாளின் வழிபாட்டின்போது, தேவியைப் பற்றிய பாடல்களை நீலாம்பரி ராகத்தில் பாடி வழிபட வேண்டும்.
சரஸ்வதி வழிபாடு
நவராத்திரி வழிபாட்டின் ஏழாவது நாளில் தேவியைப் போற்றிப் பாடும் பாடல்களை பிலஹரி ராகத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு பிலஹரி ராகத்தில் பாடுவதால் மிகவும் நன்மைகளும் புண்ணியங்களும் ஏற்படும் என்பது பெரும் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் நவராத்திரி வழிபாட்டின் எட்டாவது நாளில், தேவியின் பாடல்களை புன்னாகவராளி ராகத்தில் பாடி வழிபடுவது மிகவும் நன்மையினை விளைவிக்கும் என நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடுவர்களிடத்தில் நம்பிக்கை உள்ளது. நவராத்திரி வழிபாட்டின் இறுதி நாளான ஒன்பதாவது நாளில் தேவியின் திருப்பாடல்களை வசந்தா ராகத்தில் பாடி வழிபாடு செய்வதால் நன்மை விளையும் என பக்தர்களிடத்தில் நம்பிக்கை உள்ளது.
நவராத்திரி வழிபாட்டு முறைகள்
மேலும், நவராத்திரி வழிபாட்டின் போது, ஒவ்வொரு நாளும் தேவி ஒவ்வொரு ஆவதாரத்தில் அவதரித்து அருளாசி வழங்குவதாக நவராத்திரியை வெகு விமர்சையாக கொண்டாடுபவர்கள் நம்புகிறார்கள். அதாஅவது, முதல் நாளில் துர்கா தேவி அன்னை மகேஸ்வரியாக அவதரித்து அருளாசி வழங்குகிறாள். நவராத்திரியின் முதல் தினத்தில், துர்கா தேவியை மல்லிகை பூ, வில்வ பூ கொண்டு அலங்கரித்து வழிபடவேண்டும். மேலும், துர்கா தேவிக்கு நைவேத்தியம் செய்ய வெண்பொங்கல் செய்து வழிபட்டு மேற்கூறிய படி தோடி ராகப்பாடல்களை பாடி வழிபட வேண்டும்.
இரண்டாவது நாளில், துர்கா தேவி கௌமாரி அவதாரத்தில் தோன்றி அருளாசி வழங்குவார் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த நாளில் கௌமாரி அவதாரத்தில் உள்ள துர்கா தேவிக்கு முல்லை, துளசியால் அலங்காரம் செய்தும், புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்த வேண்டும். வழிபாட்டின் போது, மேற்கூறிய படி, கல்யாணி ராகத்தில் பாட வேண்டும்.
நவராத்திரியில் துர்கா தேவியின் கடைசி நாளான மூன்றாவது நாளில், வராகி அவதாரத்தில் தோன்றி மக்களை காக்கும் செயலில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது. இந்த மூன்றாவது நாளில் செண்பகம் மற்றும் சம்பங்கிகள் பூக்களால் அலங்கரித்து வழிபடும்போது காம்போதி ராகத்தில் பாடல் பாடி வழிபட வேண்டும்.
நவராத்திரி வழிபாட்டின் நான்காவது நாளில், தேவி மகாலட்சுமியாக அவதரித்து அருளாசி வழங்குவதாக மக்கள் நம்புகிறார்கள். மேலும், இந்த நாளில், மகாலட்சுமியை மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் மேற்சொன்ன படி, பைரவி ராகத்தில் பாடி வழிபட வேண்டும்.
ஐந்தாம் நாளில் வைஷ்ணவியாக அவதாரம் எடுக்கும் மகாலட்சுமி, அம்பிகையாகவும் அவதரிக்கிறார். முல்லை பூ கொண்டு அலங்கரித்து தயிர் சாதம் படைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது, பந்து வராளி ராகப்பாடல்களை பாட வேண்டும்.
நவராத்திரியின்ஆறாம் நாள் எனபது மகாலட்சுமியின் கடைசி நாளில், இந்திராணியாக அவதரித்து, அருளாசி வழங்கிறார். ஆறாம் நாளில் ஜாதி மலரைக் கொண்டு அலங்கரித்து வழிபடவேண்டும். மேலும், இந்த வழிபாட்டின்போது, நீலாம்பரி ராகத்தில் பாடி வழிபட வேண்டும். மேலும், இந்த வழிபாட்டின் போது, தேங்காய் சாப்பாடு செய்து நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும்.
நவராத்திரியின் கடைசி மூன்று நாடகளில் தேவி சரஸ்வதி வழிபாடு நடத்தப்படுகிறது. ஏழாம் நாளில் சரஸ்வதியாக அவதரித்துள்ள தேவியை தாழம்பூ கொண்டும் தும்பை இலைகள் கொண்டும் அலங்கரித்தும் வழிபட வேண்டும். எலுமிச்சை சாதம் செய்து நிவேதனம் செய்து வழிபாட்டில் ஈடுபட வேண்டும். இந்த வழிபாட்டின் போது பிலஹரி ராகத்தில் பாடி வழிபாடு செய்ய வேண்டும் என்பது வழக்கமாக உள்ளது.
நவராத்திரியின் எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபத்தில் அவதரிக்கும் சரஸ்வதி தேவிக்கு, ரோஜா மலரைக் கொண்டு அலங்கரித்து வழிபட வேண்டும். மேலும், வழிபாட்டின் போது புன்னக வராளி ராகத்தில் பாடல் பாட வேண்டும். மேலும் சர்க்கைரைப் பொங்கல் செய்து வழிபாட்டின் போது படைத்து வழிபட வேண்டும்.
நவராத்திரியின் கடைசி நாள் மற்றும் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி சாமுண்டியாக அவதரித்து அருளாசி வழங்குகிறாள். கடைசி நாள் வழிபாட்டில் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். தாமரை மலர்கள் கொண்டு சரஸ்வதியை அலங்கரித்து வசந்தா ராகத்தில் பாடல் பாட வேண்டும்.
ஒவ்வொரு நாள் வழிபாடு முடிந்தவுடன், கொலு வைப்பவர்கள், வழிபாட்டிற்கு வந்தவர்களுக்கு தாம்பூலம் அதாவது, வெற்றிலை கொடுத்து வழி அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்வதால் நன்மை ஏற்படும் என்பது பெரும் நம்பிக்கையாக உள்ளது.