மயிலாடுதுறை: காவிரி ஆற்றை மையமாக வைத்து, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற துலா உற்சவத்தின் ஒரு பகுதியாக, தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் முக்கிய நிகழ்வான சுவாமி மற்றும் அம்பாளின் திருமண வைபவத்தைக் காண திரளான பக்தர்கள் மயிலாடுதுறையில் திரண்டனர்.

Continues below advertisement


துவங்கிக் களைகட்டும் துலா உற்சவம்


புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவச்சுமைகளைப் போக்கிக் கொள்ள ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவதாக ஐதீகம். இதனால், காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை துலா கட்டம் போற்றப்படுகிறது. இந்த ஆன்மீகச் சிறப்பைக் கொண்டாடும் விதமாக, மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவம் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.


வதான்யேஸ்வரர் ஆலயம் 


மயிலாடுதுறையில் அருள்பாலிக்கும் ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர் ஆலயத்தில், துலா உற்சவம் கடந்த ஏழாம் தேதி (நவம்பர் 7) அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினந்தோறும் சுவாமி காவிரி கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி அளித்தல், திருக்கல்யாணம், திருத்தேர் உற்சவம் மற்றும் விழாவின் சிகரமான கடைமுகத் தீர்த்தவாரி எனப் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன.


திருக்கல்யாண வைபவம்: பக்திப் பரவசம்


பத்து நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி, ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வதான்யேஸ்வரர் சுவாமி மற்றும் ஞானாம்பிகை அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. வண்ணமயமான மலர்கள் மற்றும் ஆபரணங்களால் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்தனர்.


பின்னர், பாரம்பரிய மேளதாள மங்கல வாத்தியங்கள் இசை முழங்க, சுவாமி மற்றும் அம்பாள் இருவரும் ஆலயத்தில் உள்ள யாகசாலை மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஹோமங்கள் வளர்க்கப்பட்டு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து, பெண்கள் சீர்வரிசைப் பொருட்களுடன் திருமண மேடைக்கு வந்து சேர்ந்தனர்.


முன்னதாக, சுவாமியும் அம்பாளும் எதிரெதிர் திசைகளில் நின்று மாலை மாற்றும் வைபவம் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து, மாங்கல்யதாரணம் நடைபெற்றது. சிவனும் சக்தியும் ஒருசேர இணைந்த இந்தத் திருமண வைபவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோஷம் எழுப்பி பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர். திருமண வைபவம் முடிந்த பின், சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது.


தருமபுர ஆதீனம் பங்கேற்பு


இந்தத் திருமண வைபவத்தில், தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்றுச் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் தருமபுரம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் மடாதிபதி சீடர்கள், உள்ளூர் பிரமுகர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு, சுவாமி - அம்பாளின் திருவருளைப் பெற்றனர்.


மாலை வீதியுலா


திருக்கல்யாண வைபவம் முடிந்த பின்னர், மணக் கோலத்தில் எழுந்தருளிய வதான்யேஸ்வரர் சுவாமியும், ஞானாம்பிகை அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முக்கிய வீதிகளின் வழியே பவனி வந்தனர். வீதியுலா சென்ற சுவாமி - அம்பாளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து, தீபாராதனை காட்டி வழிபட்டனர்.


இந்த ஆண்டு துலா உற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான பிரசித்தி பெற்ற கடைமுகத் தீர்த்தவாரி உற்சவம் வரும் 16-ம் தேதி அன்று துலாக்கட்டம் காவிரியில் நடைபெறவுள்ளது. இந்தத் தீர்த்தவாரியில் நீராடப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.