சீர்காழி அடுத்த பிரசித்தி பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசம் பொங்க சாமி தரிசனம் செய்தனர்.


பிரசித்தி பெற்ற சிவாலயம்


மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.




மேலும் பல சிறப்புகள்


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.  




1008 சங்காபிஷகம்


இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சங்குகளில் நிரப்பபட்ட புனித நீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.




திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது.




மார்க்கண்டேயர் உயிரை காப்பாற்றி சிவபெருமான்


புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்கை பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.




மேலும் பல சிறப்புகள்


அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.




தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு


இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலிலும் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம் நடைபெற்றது. முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் நெல்லின் மீது வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சங்குகளில் நிரப்பபட்ட புனித நீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.