இந்துக்கள் அல்லாதோரை பணி நீக்கம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமலைக்குள் அரசியல் அறிக்கைகளை வெளியிட தடை விதித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. விதிமீறல் செய்பவர்கள் மீதும், அவ்வாறு பரப்புவோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. திருமலையில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுத வாரியம் முடிவு செய்துள்ளது. 


மேலும், திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரியம் ஸ்ரீவாரி லட்டு தயாரிப்பதில் மேம்பட்ட தரமான நெய்யைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. திருமலை அன்னமையா பவனில் திங்கள்கிழமை பி.ஆர்.நாயுடு தலைமையில் நடைபெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரியத்தின் முதல் கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 80 முக்கிய பிரச்னைகள் குறித்து வாரிய உறுப்பினர்கள் விவாதித்து, பல தீர்மானங்களை நிறைவேற்றினர். 


மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வாரியத்தில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டும் அல்லது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிற அரசுத் துறைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.நாயுடு “திருப்பதி கோயில் நிர்வாகத்தில் எத்தனை இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளனர் என்பது  குறித்து கணக்கு எடுத்து அரசிடம் கொடுக்கப்படும். திருமலையில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதுவோம். 


திருப்பதி தேவஸ்தானம் ஒரு இந்து மத நிறுவனம். இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலில் பணிபுரிய கூடாது. கோயிலில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க அரசிடம் பரிந்துரை செய்வோம்” எனத் தெரிவித்தார்.