மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால் உருவானவர். பிப்பில மகரிஷி வழிபட்டு சனி கவசம் பாடிய இந்த ஆலயத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டு துவங்கி பல்வேறு சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த ஆலயத்திற்கு வழங்கிய கொடைகள் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகளும், பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் தை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் உள்பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கொடி மரத்திற்கு எதிரே எழுந்தருளிய பெருமாளுக்கு தீபாராதனை செய்யப்பட்டது அதனை அடுத்து செப்பு தகடுகள் பதிக்கப்பட்ட ஆலய கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக ஆலயத்தின் எட்டு திக்கிலும் சக்கரத்தாழ்வார் எழுந்தருள திக்பலி அளிக்கப்பட்டு, கொடி மரத்திற்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியப் பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியாக கொடி மரத்திற்கும் பெருமாளுக்கும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஐந்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் 20 -ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 22 -ஆம் தேதி தேர் உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா: சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்ற தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு.
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியார் திருத்தல பங்கு தந்தை அருட்திரு.ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் “எங்கேயும் பார்க்க முடியாத தன் மதிப்பை சிலுவை எனும் முகக்கண்ணாடிக்கு முன்பு தான் ஒரு மனிதனால் பார்க்க முடியும்” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி நாகை மறைவட்ட அதிபர் அருட்திரு.பன்னீர்செல்வம் அடிகளார் மறையுரை ஆற்றினார்.
இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தவரும் நல்லிணக்கத்தோடு கொண்டாடும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நடைபெற்றது. புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் ஆலய வளாகத்தில் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.