கொள்ளிடம் அடுத்த மாதானம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.  


மாதானம் முத்து மாரியம்மன் கோயில் 


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயில். இங்கு நூறாண்டுகளுக்கு முன்பு துண்டு துண்டுகளாக வெட்டி போடப்பட்ட புளிய மரங்கள் மீண்டும் துளிர்த்து மரமாக வளர்ந்துள்ளது.


அதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் அங்கு முத்துமாரியம்மன் தோன்றியதாக கருதி இன்றும் கம்பீரமாக காட்சி அந்த புளிய மரத்தினை கோயிலின் தல விருட்சமாக வணங்கி வருகின்றனர்.


மேலும் இக்கோயில் பக்தர்களின் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்து நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆகையால் இங்கு திருவிழா காலம் மட்டும் இன்றி நாள்தோறும் ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர்.




ஆண்டு தீமிதி உற்சவம் 


இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருகோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஆண்டு திமிதி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீமிதி திருவிழா கடந்த 7 -ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெற்றது.




தமிழகத்தில் மற்ற அம்மன் கோயில்களில் இல்லாத ஒன்று 


இக்கோயில் தீமிதி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் இங்கு நடைபெறும் தீமிதி திருவிழாவில் தான் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழாவையொட்டி காலை அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 




50 ஆயிரம் பக்தர்கள் 


தொடர்ந்து விரதம் இருந்து காப்பு கட்டிக் கொண்ட சுமார் 5000 -த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள புது மண்ணி ஆற்றில் நீராடி சக்தி கரகம் முன்னே செல்ல காவடி, பால்குடம் எடுத்து வந்து அம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் பாடை கட்டி இழுத்தும், கால், கை உள்ளிட்ட உருவபொம்மைகளை வாங்கி வைத்தும், கண்ணடக்கம் செலுத்தியும், மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.




விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்து, சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தருமைஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் வருவாய் துறை காவல் துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் சீர்காழி, புதுப்பட்டினம் மற்றும் கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவையொட்டி சிதம்பரம் மற்றும் சீர்காழியில் இருந்து மாதானத்திற்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் நடராஜன் மற்றும் விழா குழுவினர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.