கரூர் ஐந்து ரோடு அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ கோடீஸ்வரன் ஆலயத்தில் ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.




நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் நந்தி பகவானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்து வருகின்றனர்.




இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு அருள்மிகு  ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ கோடீஸ்வரன் ஆலயத்தில் வீற்றிருக்கும் நந்தி பகவானுக்கும் மூலவர் சுவாமிக்கும் எண்ணைக்காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள் மஞ்சள் சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, பக்தர்கள் வழங்கிய அருகம்புல் உள்ளிட்ட வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கோடீஸ்வர ஸ்வாமிக்கும், பாலா அம்பிகைக்கும், தொடர்ந்து நந்தி பகவானுக்கும் பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கோடீஸ்வரன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.