மயிலாடுதுறையில் இன்று நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற ஐதீக நிகழ்வான துலா உற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி கடைமுகத் தீர்த்தவாரி வரலாற்றை இக்கட்டுரை காண்போம்.


காவிரி துலா உற்சவ வரலாறு 


பாவங்களைப் போக்கும் நதியாக போற்றப்படுவது கங்கை நதி. அப்படி தங்களின் பாவங்களைப் போக்க கங்கையில் பக்தர்கள் புனித நீராடியதால் நதி  முழுவதும் ஒரு காலத்தில் கருப்பு நிறமாக மாறியதாம். அதனால் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் சென்று கங்கை நதி வேண்டியுள்ளது. அப்போது சிவபெருமான்  மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள கங்கை நதிக்கு வரம் அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது. அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக  ஐதீகம். இதேபோன்று புண்ணிய நதிகள் அனைத்தும் இங்கு நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாகவும் வரலாறு.





பாவ விமோசனம் பெற்று பார்வதி தேவி 


சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்து கொண்டு அவமானப்பட்ட பார்வதியை காவிரிக்கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் சபித்து விடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை வெகுகாலம் பூஜை செய்து அம்பிகை சுய உருவம் அடைந்து பாவங்கள் நீங்கப்பட்டு சிவனை அடைந்ததாகவும் வரலாறு. இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க மயிலாடுதுறையின் நகரின் மையப்பகுதியில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.


துலாகட்டத்தின் மேலும் சிறப்பு 


இங்கு காவிரிக்கு, ரிஷப தீர்த்தம் எனப்பெயர். நந்திதேவருக்கு ஒருசமயம் அகம்பாவம் வந்துவிட்டது. அதை அறிந்த சிவபெருமான், நந்திதேவரைப் பாதாளத்தில் அழுத்தினார். அப்படி நந்தி தேவர் அழுத்தப்பட்ட இடம், மயிலாடுதுறை. இந்த காவிரியின் துலாக் கட்டமாகும். அந்த இடத்தின் நடுவில் இருக்கும் சுவாமியின் திருவடிவை இன்றும் காணலாம். ரிஷப தேவர் அழுந்திய இடம் ஆதலால், அது ரிஷப தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள். தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி,லெட்சுமி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருவதாகவும், ஆகையால் துலா மாதம்  என சொல்லப்படும் ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்டத்தில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். 




ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கின்ற மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர். அதனால் துலா ஸ்நானம் பாவம், துன்பம் போக்கி புண்ணிய பலனை அளிக்கும். ஐப்பசி மாதத்தின் முதல் நாள் தொடங்கி, கார்த்திகை மாதம் முதல் தேதி முடிய  இங்கு நீராடுவது, மிகவும் விசேஷம். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுழுக்கு அன்று நீராடுவது மிக சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30-ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும், அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


முடவன் முழுக்கு


கார்த்திகை மாதத்தின் முதல் நாள் “முடவன் முழுக்கு” என்று கொண்டாடப்படுகிறது. துலா மாத நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தை போக்க முடவன் ( மாற்றுத்திறனாளி) ஒருவர் மயிலாடுதுறைக்கு வந்தார். தன் இயலாமையால் துலா கட்டத்துக்கு உரிய காலத்தில் வரமுடியாமல் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் வந்துள்ளார். முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவர் முறையிட்ட, சிவபெருமான்  ‘’நீ போய் மூழ்கு" உனக்கும் பேறு கிடைக்கும்’’ என்று அருள் செய்ததாகவும், அவர் வாக்குப்படியே அவரும் கார்த்திகை மாதம் முதல் நாளன்று புனித நீராடி முக்தி பெற்றுள்ளார். அதுவே ‘முடவன் முழுக்கு’ எனப்படுகிறது.




இதேபோல் கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை  தம்பதியர்  மாயூரம் வருவதற்குள் 30-ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் சிவனை வேண்டி காவிரி துலா கட்டத்தில் தங்கிய  நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.




இந்த புராண வரலாறு நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் துலா உற்சவமாக கொண்டாடி வருகின்றனர். அந்த நாட்களில் பக்தர்கள் துலா கட்டத்தில் உள்ள காவிரியில் மூழ்கி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ளும் நிகழ்வாக இங்கு நடைபெற்று வருகிறது.இங்கு நீராடுவது காசிக்கு நிகராகவும் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கடைமுகத் துலாகட்ட தீர்த்தவாரி இன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது. துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து புனித நீராட உள்ளனர்.