மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிலுள்ள ஆக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த வாள்நெடுங் கண்ணியம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் இன்று வெகு சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலின் புண்ணிய நிகழவான குடமுழுக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்
சோழர் கால கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தான்தோன்றீஸ்வரர் கோயில், மாடக்கோயில்களில் ஒன்றாகும். கோசெங்கட் சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்து முக்தி பெற்ற திருத்தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தின் மற்றொரு முக்கியத்துவம், ஒரு குறுநில மன்னன் ஆயிரம் அடியார்களுக்கு அன்னதானம் அளித்தபோது, இறைவன் ஆயிரத்தில் ஒருவராக வந்து அன்னம் உண்டு மன்னனுக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இத்தகைய பல்வேறு பெருமைகள் நிறைந்த இக்கோயில், புதுப்பிக்கப்பட்டு, இன்று அதன் மகா கும்பாபிஷேகத்தை கண்டது.
யாக சாலை பூஜைகள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக யாக சாலை பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தன. முதல் கால யாக சாலை பூஜைகள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, தினமும் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினபான இன்று காலை, ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
பரவசத்தில் பக்தர்கள்
பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க ஓம் நம சிவாய கோஷங்கள் முழங்க, ஊர்வலம் கோயில் கோபுர கலசத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மற்றும் சிவ ஆகம வல்லுநர்கள் வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், மந்திரங்கள் ஓத, சுவாமி, அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகளின் சன்னதி விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷங்கள் எழுப்பி, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
அலைமோதிய பக்தர்களின் கூட்டம்
கும்பாபிஷேகத்தைக் காண உள்ளூர் மற்றும் இன்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கும்பாபிஷேக நிகழ்வு முடிந்ததும், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவர் வாள்நெடுங் கண்ணியம்மன் மற்றும் தான்தோன்றீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு ஏற்பாடுகள்
இந்த நிகழ்வில், கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன், செயல் அலுவலர் உமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் இன்றி கும்பாபிஷேக நிகழ்வை காண, செம்பனார்கோவில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அன்னதானம் மற்றும் குடிநீர் வசதிகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டிருந்தன. கும்பாபிஷேக நிகழ்வு நிறைவடைந்ததும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.