மாசிமகம்


வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார். மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.


இத்தகைய சிறப்பு பெற்ற விழாவை முன்னிட்டு  ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆரத்தி பெருவிழா நடத்தப்படுகிறது. மாசி மக நாளான இன்று கும்பகோணம் மகாமகக் குளம் மேல் கரையில் மாலை 6 மணிக்கு ஆரத்தி பெருவிழா நடைபெறவுள்ளது. சதுர்வேத பாராயணம், சைவ திருமுறைப் பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் நடைபெறும். மேலும், 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் மாசி மக விழா கோலாகலமாக இன்று நடைபெறும்.


புனித நீராடிய மக்கள்


கும்பகோணத்தில் முக்கிய திருவிழாவான மாசி மக பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமானோர் மகாமக குளத்தல் புனித நீராடி வருகின்றனர். மேலும் மகாமக குளத்தை ஒட்டி உள்ள காசி விஸ்வநாதர் கோயில், அபி முகேஸ்வரர் கோவில், கௌதமேஸ்வரர் கோவில்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


மேலும், திதி நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர முடியாதவர்கள் மாசி மக தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இங்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. எனவே மகா மக குளக்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். 


இன்று காலை 9 மணி அளவில் கும்பகோணம் சக்கரபாணி சுவாமி ஆலயத்தில் தேரோட்டமும், மதியம் 12 மணியளவில் மகாமக திருக்குளத்தில் 12 சிவாலயங்களில் இருந்து  எழுந்தருளும் சுவாமிகளின் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இங்கு மட்டுமின்றி, உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  நடைபெற்றுவருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா பக்தி கோசம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.  மேலும், சென்னை மெரினாவிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட கோயில்களின் சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


கலர்ஃபுல்லான காஞ்சிபுரம்.. அசரவைத்த வாண வேடிக்கை.. காமாட்சி அம்மன் வெள்ளித்தேர் ஊர்வலம்