தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது ஆகும். அதிலும் மார்கழி மாதம் என்றாலே ஆன்மீகவாதிகளுக்கு மிகமிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். பழைய பிரபலமான தமிழ் பாடலான காலங்களில் அவள் வசந்தம் பாடலில் கூட மாதங்களில் அவள் மார்கழி என்றுதான் கவிஞர் வர்ணித்திருப்பார். தை முதல் மார்கழி வரையிலான 12 மாதங்களில் மார்கழி மாதம் மட்டும் ஏன் அத்தனை சிறப்பு தெரியுமா?


மார்கழி ஏன் சிறப்பு?


புராணங்களின்படி, மனிதர்களின் ஒரு ஆண்டு காலமானது தேவர்களுக்கு ஒரு நாள் கணக்காக கருதப்படுகிறது. அதாவது, தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் காலை முதல் பகல் வரையிலான காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் இரவு முதல் அதிகாலை வரையிலான காலம் என்று கருதப்படுகிறது. அதில், மார்கழி மாதமானது அதிகாலை பொழுதாக கருதப்படுகிறது.


வைகறைப் பொழுதான அதிகாலையாக மார்கழி கருதப்படுவதாலே மார்கழி தனித்துவமாக கருதப்படுகிறது. ஏனென்றால், மனிதர்களாகிய நாம் அதிகாலையில் எழுவதாலும், அதிகாலை நாம் உடற்பயிற்சி செய்வதும் நமக்கு மிகவும் ஆரோக்கியமான விஷயம் ஆகும். இதுபோன்றே, அதிகாலை பொழுதாக கருதப்படும் மார்கழியும் புராணங்களின்படி தேவர்களுக்கு விடியற்பொழுது என்பதால் தனித்துவமான, தெய்வீகமான மாதமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, சூரிய உதயத்திற்கு முன்பான அதிகாலை பொழுதான 4 மணி முதல் 6 மணி வரையிலான காலகட்டம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.


சைவ, வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு:


பொதுவாக மார்கழி மாதம் என்றால் பெருமாள் கோவில் உள்பட வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதை நாம் அறிவோம். ஆனால், சிவபெருமானின் சைவ தலங்களிலும் மார்கழி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சிவபெருமானில் திருத்தலங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படும். பெருமாள் கோயில்களில் திருப்பாவை பாடப்படுவது வழக்கம். மகாவிஷ்ணு கோயில்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவது வழக்கம் ஆகும்.


கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்திருநாள் போல, மார்கழி மாதத்தில் தனித்துவம் மிக்க சிறப்பு வாய்ந்த நாளாக வைகுண்ட ஏகாதசி உள்ளது. இந்த நாளில் பெருமாள் கோயில்களில் இரவு முழுவதும் கண்விழித்து சாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் திறப்பை கண்டால் புண்ணியம் சேரும் என்பது ஐதீகம் ஆகும். நடப்பாண்டிற்கான மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. வைகுண்ட ஏகாதசி வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.


மேலும் படிக்க: திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு; மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில் பிராயசித்த பூஜை


மேலும் படிக்க: Karungali Malai: எல்லோரும் கருங்காலி மாலையை அணியக்கூடாது! இவர்களுக்கு மட்டும்தான்! - ஜோதிடர் சொல்வது என்ன?