காஞ்சிபுரம், திருப்புக்கூடல் தெருவில் இந்தி உள்ளிட்ட பல மொழிகளை இலவசமாக கற்றுத்தரும் பண்டிட் சாமுண்டீஸ்வரிசேகர் அவர்கள்  மாணவ மாணவிகள் இடையே ஆன்மிக பக்தியை வளர்க்கும் எண்ணத்துடன் ஆண்டுதோறும், மார்கழி மாதம் பஜனை நடத்தி வருகிறார்.  மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து தினந்தோறும் பஜனை நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், பள்ளி சிறுவர் சிறுமிகள் பங்கேற்று, திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட பாசுரங்களை  பாடி, தெருக்களில் ஊர்வலமாக செல்கின்றனர்.



 

கிருஷ்ணர் ராதை கோலத்தில் தினந்தோறும் இந்த பஜனை திருப்புக்கூடல் தெருவில் தொடங்கி பாண்டவ பெருமாள் கோவில் மாட வீதி வழியாக வந்து பாண்டவ தூத பெருமாள் கோவிலில்  முடிவடைகின்றது. இது குறித்து, திருப்பாவை சபா  நிர்வாகி சாமுண்டீஸ்வரிசேகர் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே பக்தியை வளர்த்தால் அவர்களுக்கு ஒழுக்கம் ஏற்படும்; படிப்பிலும் ஆர்வம் வளரும்.அதற்காக, பஜனையை ஆரம்பித்தோம். துவக்கத்தில், சிலர் மட்டும் பங்கேற்றனர், தற்போது, 50 சிறுவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்தி ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை இலவசமாக கற்றுத் தந்து மொழியாற்றலை வளர்க்கின்றோம் என்றார்.



மேலும் பள்ளி மாணவ மாணவிகள், மார்கழி மாதத்தில், தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து, பஜனையில் பங்கேற்கின்றனர். இந்த சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்படுகின்றன. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்க உரையும் வழங்கபட்டு அதை ஒப்புவிப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது என கூறினார்.  

 



ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் ஹரிகரன்  கூறும்போது , இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் ஆண்டாளின் அருளிச்செய்த திருப்பாவை  பாடும்போது மனதுக்கு உற்சாகமாக உள்ளது ,சுறுசுறுப்பாக செயல்பட முடிகின்றது. அதனால் நான் 4 வருடமாக மார்கழி மாத பஜனையில் கலந்து கொள்கின்றேன் .எங்களை மார்கழி மாத பஜனை பக்குவப்படுத்தி உள்ளது என்றும் பாடங்களில் அதிக கவனம் செலுத்த முடிகின்றது என்றும் தமிழ் உச்சரிப்பு நன்றாக வளர்கின்றது என்றும் தெரிவித்தார்..


 


மார்கழி கோலம் மகத்துவம்- புராண பின்னணியும்

 

மார்கழி மாதத்தில் பாரதப் போர் நடந்தபோது, பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர்வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது.

 

அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது. தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாகவும் அக்காலத்தில் இவ்வழக்கம் கையாளப்பட்டது. மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்.பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன.