பொதுவாக இந்தியாவில் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி வந்து விட்டாலே வீடுகள் தெருக்கள் கோவில்கள் என அனைத்து பகுதிகளும் ஒளி விளக்குகளால் வண்ணமயமாக காட்சியளிக்கும்.


 தீபங்களின் திருவிழாவான இந்த தீபாவளியில் அனைத்து குடும்பங்களும் ஒன்றிணைந்து தமது சொந்த பந்தங்களோடு கொண்டாடுவர். ஆகவே வரவிருக்கும் தீபாவளியை வரவேற்பதற்கு வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் சில மாற்றங்களை செய்தால் மிகவும் சிறப்பு எனக் கூறப்படுகிறது.


தீபாவளி அன்று வீடு தூய்மையாகவும், புனிதமாகவும் இருப்பதற்கு முன்கூட்டியே வீடுகளை சுத்தம் செய்து வைக்க வேண்டும். அப்போதுதான் மகாலட்சுமியானவள் நேரடியாகவே நமது வீடுகளுக்கு அன்று வந்து வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆகவே வீட்டின் நிலை வாயில் முதல் உட்புற அறைகள், பூஜை அறை என இவை அனைத்தையும் சுத்தமாக தூய்மை படுத்த வேண்டும் .இதற்கு வாஸ்து சாஸ்திர குறிப்புகள் முக்கியமானவை எனக் கருதப்படுகிறது. வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருக ,செல்வ செழிப்பை பெற தீபாவளியன்று வீடு தூய்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்.


ஒரு மகிழ்ச்சி நிறைந்த வீட்டிற்கு அடிப்படையாக அமைவது அந்த வீட்டின் தூய்மை என கூறப்படுகிறது. வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தமதுவீடுகளையும் சுத்தம் செய்வர். வீடுகளில் ஒட்டடை அடித்து, மூலை முடுக்குகள் எல்லாம் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது தீபாவளிக்கான வாஸ்து குறிப்பில் முக்கியமானதாகும்.


முக்கியமாக சமையலறை ,ஸ்டோர் ரூம் மற்றும் வீட்டின் ஏனைய பகுதிகளிலும் சிறிய சிலந்தி வலைகள் இல்லாதவாறு சுத்தம் செய்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதேபோல் வீட்டில் தேவையற்ற, பயனற்ற வகையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டுமென வாஸ்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். வீடுகளில் பயனற்ற விதத்தில் பொருட்களை சேர்த்து வைப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல என கூறப்படுகிறது.


வீட்டில் பழைய உடைந்த  பாத்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், உடைந்த கண்ணாடி ,  பயன்படுத்தாத பொருட்களை வீட்டில் இருந்து தூக்கி எறிந்து விட வலியுறுத்தப்படுகிறது. வீடுகளில் இவ்வாறு வைத்திருப்பது  கெட்ட சகுனம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வீட்டை எந்த அளவுக்கு சுத்தம் செய்து காற்றோட்டமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.


வீட்டின் தலைவாசலான நிலைவாயிலை தூய்மைப்படுத்துவது வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானது. வீட்டிற்குள் மகாலட்சுமி வந்து வாசம் செய்ய வேண்டுமென்றால் முதலில் உங்கள் நுழைவாயில் தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது. பொதுவாக லட்சுமி தேவியின் கால்தடங்களை பிரதான நிலைவாசலில் வரைந்து வரவேற்போம். நிலைவாசல் கதவு பகுதி தூய்மையானதாகவும் ,நன்கு வெளிச்சம்மிக்கதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல ஆற்றல்கள் வீட்டினுள் நுழையும் என நம்பப்படுகிறது.


அதேபோல் வீட்டை சுத்தம் செய்யும் போது வடக்கு மற்றும் வடகிழக்கு மூலைகளில் பொருட்கள் நிறைந்திருக்காமல் இருப்பது சிறந்தது. இவ்வாறு இருந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் இருப்பதால், அது நம்பப்படுகிறது.


வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளுக்கு இடையில்  , பொருத்தமான நல்ல ஆற்றலை கொடுக்கக் கூடிய ,சிறிய அளவிலான தாவரங்களை வைத்தால் மிகவும் சிறப்பு என  வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒரு வீட்டின் நிதி நிலையை அதிகரிக்க அதன் மையப் பகுதியை சுத்தமாகவும், அழகுடனும் வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.


வீட்டை முழுவதுமாக சுத்தப்படுத்திய பின்னர் இறுதியாக உப்பு நீரை தெளித்து நேர்மறையாற்றலை பெருக செய்ய வேண்டும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தீபாவளி என்று அதிகாலையிலும் கல் உப்பை நன்கு கரைத்து வீடு முழுவதும் தெளிப்பது மகாலட்சுமியை நேரடியாகவே வரவேற்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். தீபாவளி அன்று வீடு பிரகாசமாக இருப்பதயே மகாலட்சுமி தாயாரும் ஏனைய தெய்வங்களும் விரும்புவார்கள் என சொல்லப்படுகிறது.


அதிலும் வாஸ்து சாஸ்திரத்துக்கு ஏற்ற வகையில் அலங்கார விளக்குகளை வீட்டின் எந்தெந்த பகுதிகளில் ஏற்றினால் சிறந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கிழக்கு திசையில் மஞ்சள்,ஆரஞ்சு சிவப்பு போன்ற மங்களகரமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கலாம் .


மேற்கு திசையில் இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு விளக்குகளை கொண்டு  அலங்கரிப்பது சிறப்பு என வாஸ்து குறிப்பு கூறப்பட்டுள்ளது. தெற்கு பகுதியில் ஊதா,சிவப்பு, வெள்ளை நிற விளக்குகளை கொண்டு அலங்காரம் செய்வது சிறப்பு என நம்பப்படுகிறது. 


அதேபோல்  வீட்டின் வடக்கு திசையை அலங்கரிக்க பச்சை, நீலம், மஞ்சள்  நிற விளக்குகளை பயன்படுத்துவது நேர்மறை ஆற்றலை பெருக்கும் என நம்பப்படுகிறது.