இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, தொன்மையான 92 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 42 வது வல்லுநர் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

 

அதன்படி, சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், விருதுநகர் மாவட்டம் சின்னவாடி சென்னகேசவப் பெருமாள் கோயில், சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயில், சேலம் மாவட்டம் மேட்டூர், பத்திரகாளியம்மன் கோயில், பவானி வரதராஜப் பெருமாள் கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன்புதூர் முப்பிடாரி அம்மன் கோயில், அகத்தீஸ்வரம் பதினெட்டாம்படி இசக்கியம்மன் கோயில், உட்பட 92 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன், வல்லுநர் குழு உறுப்பினர்கள், தலைமை பொறியாளர், தொல்லியல் துறை வல்லுநர்கள்,கண்காணிப்பு பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.