இந்துக்கள் மகா சிவராத்திரியைக் கடைப்பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்த மகா சிவராத்திரியில் ருத்ராட்ச பூஜை செய்வது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.


சிவ சின்னங்களில் முக்கியமானது ருத்ராட்சம். இது சிவனின் அம்சமாகவே கருதப்படுகிறது. ருத்ரன் என்பது சிவ ரூபத்தை குறிக்கும். அட்சம் என்றால் கண்கள் என்று பொருள். சிவனின் கண்களுக்கு நிகரானது. ருத்ரனின் அட்சம் என்பதால் ருத்ராட்சம் என்ற பெயர் உண்டாயிற்று.


சிவ தாண்டவத்தின் போது ருத்ரனின் கண்களில் இருந்து சிந்திய நீர்த் துளிகளில் இருந்து ருத்ராட்ச மரங்கள் உண்டாகின. இவற்றில் முளைத்த மணிகள் போன்ற காய்களுக்கு ருத்ராட்சம் என்ற பெயர் ஏற்பட்டது. கேட்ட வளங்களை தரக் கூடிய கருணா மூர்த்தி என்பதனால் ருத்ராட்சம் அணிபவர்களை எந்த தீமையும் நெருங்காது.


மகா சிவராத்திரி, பிரதோஷம், சிவ பூஜை, ருத்ர ஜபம் போன்ற சிவ வழிபாட்டிற்குரிய நேரங்களில், சிவாலயங்களில் நடக்கும் வழிபாட்டின் போது ருத்ராட்ச மாலை அணிவது மிக அதிகமான பலனை தரக் கூடியதாகும். குறிப்பாக மந்திர உச்சாடனம் செய்யும் போது ருத்ராட்சம் பயன்படுத்தி ஜபம் செய்வது பல மடங்கு நன்மைகளை தரும்.


ருத்ராட்சம் வைத்திருப்பவர்கள் அல்லது அணிந்திருப்பவர்கள், ருத்ராட்ச மாலையை பால் அல்லது பன்னீரில் மூழ்க வைத்து எடுக்கலாம். கங்கா தீர்த்தம் இருந்தால் அதிலும் மூழ்க வைத்து எடுத்து, நன்றாக துடைத்து விட்டு, கையில் வைத்து, இரு கைகளாலும் மூடி, தீட்சை பெற்றவர்களாக இருந்தால் தீட்சை மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். தீட்சை பெறாதவர்கள், ஓம் நவ சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை சொல்லி உச்சாடனம் செய்ய வேண்டும். பிறகு அந்த மாலையை சிவ பெருமானின் படத்திலோ அல்லது லிங்கத்தின் மீதோ அணிவிக்க வேண்டும்.


வீட்டில் சிவ லிங்கம் வைத்திருப்பவர்கள், மகா சிவராத்திரியன்று நான்கு காலங்களுக்கும் உரிய அபிஷேக பொருட்களை பயன்படுத்தி, அந்தந்த காலங்களுக்குரிய நைவேத்தியம் படைத்து சிவ பூஜை செய்யலாம். முடியாதவர்கள், வெறும் தண்ணீர் வைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, இரண்டு வில்வ இலைகளையாவது பயன்படுத்தி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.


மகா சிவராத்திரி வரலாறு: 


தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார்.


இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார்.உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார்.


எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். இதனால் இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர்.அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.