ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு அமாவாசையும் தனித்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. குறிப்பாக, ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளாய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளாய அமாவாசை ஆகும்.


மகாளய அமாவாசை:


நடப்பாண்டிற்கான மகாளய அமாவாசை இன்று வழிபடப்படுகிறது. பொதுவாக ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி மற்றும் தை மாத அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் இந்த மகாளய அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதல் நீர்நிலைகளில் பக்தர்கள் திரளாக குவிந்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். தமிழ்நாட்டில் புனித நீர்நிலைகளாக கருதப்படும் பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் அளித்தனர்.


நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்:


ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடல், கடலூர் வெள்ளி கடற்கரை, திருச்சி காவிரி கரை, காரைக்குடி கொற்றாளீஸ்வரர் கோயில் குளக்கரை, கன்னியாகுமரி கடற்கரை, திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து புனித நீராடி பின்னர் தர்ப்பணம் அளித்தனர். தங்கள் முன்னோர்களுக்கு எள்ளுப்பிண்டத்தை படையலாக வைத்து இந்த தர்ப்பணம் நடைபெற்றது.


மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். மேலும், முன்னோர்களுக்கு நீண்ட வருடங்களாக தர்ப்பணம் அளிக்காமல் இருந்தாலும் இந்த மகாளய அமாவாசை நன்னாளில் தர்ப்பணம் அளிப்பதால் அனைத்து சங்கடங்களும் தீரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

தர்ப்பணம்:


சென்னையிலும் காலை முதலே முக்கிய நீர்நிலைகளில் பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் அளித்தனர். சென்னையில் திருவொற்றியூர் கடற்கரை பகுதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் உள்பட சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் காலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் அளித்தனர்.


புகழ்பெற்ற நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் அளித்த காரணத்தால் அங்கு வழக்கத்தை விட அதிகளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், கடல் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் புனித நீராட பக்தர்கள் மிக ஆழமான பகுதிக்குச் செல்லாத வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்திருப்பார்கள்.


சதுரகிரி மலை:


மகாளய அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கேஸ்வரரை வழிபட ஆயிரக்கணக்கில் மலை ஏறினார். இதனால், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், தமிழ்நாட்டில் பல கோயில்களிலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.