கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்துகின்றன. தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்க உள்ள ஆதியோகி ரதங்களை முக்கிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைக்கின்றனர். 

Continues below advertisement

அந்த வகையில் தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள், ஆதியோகிக்கு தீப ஆரத்தி காட்டி இன்று (டிசம்பர் 23) தொடங்கி வைத்தார்.

ஆதியோகி ரத யாத்திரை

தென் மண்டலத்தில் ஆதியோகி ரதங்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் கோயில், திருவேடகம் ஏடகநாதர் கோயில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில், காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில், திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதர் கோயில், உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாகச் செல்ல உள்ளது.

Continues below advertisement

முன்னதாக, மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். அவ்விழாவில் பேரூர் ஆதீனம் பேசுகையில், "1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்கள் தலங்கள் தோறும் சென்று மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அதுபோலவே, இன்றைக்கு இந்த ஆதியோகி ரதங்கள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி மக்களை ஆன்மீக செந்நெறிக்கு அழைக்கின்றன." என்று அருளாசி வழங்கினார்.

மேலும் சிரவை ஆதீனம் அவர்கள் பேசுகையில், "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அருளாளர்களின் சிந்தனையைச் செயல்படுத்தும் உன்னத முயற்சியே இந்த ரத யாத்திரை. இது மக்களிடையே ஆன்மீக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்." என்று குறிப்பிட்டார்.

நான்கு திசைகளிலும் யாத்திரை

ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொள்ள உள்ளன.

இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற வழியாக சிவத்தலங்கள் வழியாக, சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன. ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதனுடன், ‘சிவ யாத்திரை’ எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். இதனுடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களை தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாத யாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்துக்கு வருகை தர உள்ளனர்.