கோயில் நகரம் காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் கைத்தறி பட்டுக்கு பிரபலமாக இருந்தாலும்,  காஞ்சிபுரத்திற்கு மற்றொரு பெயர் கோயில் நகரம் என்றே சொல்வார்கள். ஏனென்றால் காஞ்சிபுரம் முழுவதும் கோயில்கள் நிறைந்த ஊராக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாநகரத்தை கோயில்களில் வைத்து இரண்டு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று சிவக்காஞ்சி  மற்றொன்று விஷ்ணு காஞ்சி. சிவன் கோயில்கள் அதிகம் இருக்கும் இடங்கள்   சிவ காஞ்சி (பெரிய காஞ்சிபுரம் ) என்றும், திருமால் கோயில்கள் அதிகம் உள்ள  பகுதியை, விஷ்ணு காஞ்சி ( சின்ன காஞ்சிபுரம் )  என்று அழைத்து வருகின்றனர் .


முக்தி தரும் ஏழு நகரங்கள்


அயோத்தி, மதுரா, அரித்துவார், வாரணாசி ,காஞ்சிபுரம், உஜ்ஜைன், துவாரகை  ஆகிய ஏழு நகரங்களும் முக்தி தரும்  நகரமாக  இந்து  மக்களால் நம்பப்படுகிறது.  அந்த வகையில் அவற்றில் காஞ்சிபுரம்   நகரமும் ஒன்று என்பதால்,  காஞ்சிபுரத்திற்கு கூடுதல் சிறப்பு உள்ளது.


மகா சிவராத்திரி:


மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதியில் வரும் தேய்ப்பிறையே மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இப்போது முதலே சிவாலயங்களிலும் சிவ பக்தர்களும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த நன்னாளில் சிவாலயங்களுக்கு சென்று சிவனை வணங்கி பூஜித்தால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.






300 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்:


நடப்பாண்டு வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மகா சிவராத்திரியானது 300 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ மகா சிவராத்திரி ஆகும். இந்த மகா சிவராத்திரியில் நான்கு யோகங்கள் ஒன்று கூட உள்ளது. அதாவது, சர்வார்த்த சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம் மற்றும் சுக்கிர பிரதோஷம் இந்த மகா சிவராத்திரியில் ஒன்று கூட உள்ளது.



இதற்கு முன்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த மகா சிவராத்திரியில் இந்த நான்கு யோகங்களும் ஒன்று கூடியதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. அதற்கு பின்பு, தற்போதுதான் இவை ஒன்று கூட உள்ளது.  சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரியில். கோவிலுக்கு சிறப்பு மிக்க காஞ்சிபுரம் நகரத்தில், நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய கோயில்கள் குறித்து பார்த்து வருகிறோம்.  அந்த வகையில் காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில்  குறித்து பார்க்கலாம்.


காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் - பிறவாத்தானம் 


காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இக்கோயில் 1300 வருட பழமையானது. பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. வாம முனிவர் மறுபிறப்பு வேண்டாம் என்று வேண்டி பூஜித்த கோயிலாக காஞ்சி புராணத்தில் கூறப்படுகிறது. கஜ லட்சுமி, தக்ஷிணாமூர்த்தி, மகிஷாசுரமர்த்தினி, ஜலந்தரஸம்ஹர மூர்த்தி, ப்ரம்மா,விஷ்ணு மற்றும் துவார பாலகர்கள் என பல அழகிய சிற்பங்களும் கோயில் அமைப்பும் மிக சிறப்பானது.




வாமதேவ முனிவர் 


வேத காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் வேத காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும், வாமதேவ முனிவர் ( இவரது தந்தையின் பெயர் கௌதம முனிவர் ) பிறப்புக்கு அஞ்சி, பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி வேண்டினார்  என்பது நம்பிக்கையாக உள்ளது. இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா"  என வரம்  வரம் அளித்துள்ளார். வாமதேவ   முனிவரும்   இறைவன் வரம் கொடுத்ததின் அடிப்படையில் காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும்.  இதன் காரணமாக இந்த  கோயிலுக்கு பிறவாத்தானம் எனப்பட்டது.


 


 சிவராத்திரி அன்று  மட்டும்


 இக்கோயில்  தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  தினமும் இக்கோயிலில் பூஜைகள் நடைபெறாததால்,  சமூகவிரோதிகள்  மூலம் கோயில்  சிதறமடைந்து விடக்கூடாது என்பதற்காக , கோயில் பூட்டிய உள்ளது. இக்கோவில் இருக்கும் இடம் காஞ்சிபுரத்தில் இருக்கும் பலருக்கு தெரியாது, என்பதே நிதர்சன உண்மை. இக்கோவிலில் இங்கு உள்ளது என்பதை குறிப்பிடும் வகையில், கோவில் பெயர் கொண்ட பலகை கூட  கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.




கடந்த சில ஆண்டுகளாக சிவராத்திரி அன்று மட்டும்,  தொல்லியல் துறை அனுமதியுடன்  வரலாற்று  ஆர்வலர்களும் , பக்தர்களும் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். பிற நாட்களில்  கோவிலை பார்க்க விரும்பினால், தொல்லியல் துறை அனுமதியுடன்  செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பு இருந்தால் சிவராத்திரி என்று சென்று இறைவனை தரிசித்து விட்டு வாருங்கள்.


அமைவிடம்


 பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெரு காமராஜ் நகர் குடியுறுப்பு பகுதியில் உள்ளது.  கோயிலுக்கு எதிரே இறவாதேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு சிறப்புமிக்க கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது