தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து தஞ்சை பெருவுடையார் கோயிலில் மகாசிவராத்திரி வரும் 18ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி காலை 6 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது என தஞ்சை உதவி ஆணையர் கவிதா தெரிவித்துள்ளார்.



சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகும். இவற்றில் மாக சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது. அந்த வகையில் 2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ம் தேதி வருகிறது. அன்று சனிப் பிரதோஷம் மற்றும் திருவோண நட்சத்திரம் இணைந்து வருகிறது.

இதை ஒட்டி உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகாசிவாராத்திரியை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் தஞ்சை திலகர் திடலில் 18ம் தேதி மாலை 6 மணி முதல் 8. 15 மணி வரை டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினர் மங்கள இசை, மாலை 6.15 மணிமுதல் 6.30 மணி வரை சிவனேசன், தீபக்ராஜா வழங்கும் திருமுறை விண்ணப்பம், மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை ஆரம்ப விழா குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.





மேலும் மாலை 7 மணி முதல் 7.30 மணி வரை கயிலை வாத்தியம், இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை இலட்சுமணனின் தெருகூத்து , இரவு 8.15 மணிமுதல் 9 மணி வரை காமாட்சி பத்மநாபன் குழுவினர் நாத இசைசங்கமம் நடைபெற உள்ளது. அதேபோல் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பத்மஸ்ரீ, கலைமாமணி சீர்காழி கோ.சிவசிதம்பரம் குழுவினரின்  பக்தி இசையும், இரவு 10 மணி முதல் 11:30 மணி வரை நகைச்சுவை இராமலிங்கம் குழுவினர்  பட்டிமன்றம்,  இரவு 11.30 மணி முதல் 12 மணி வரை கலைமாமணி தேன்மொழியின் பறை இசை நடைபெற உள்ளது.


இரவு 12 மணிமுதல் 12.30 மணி வரை கலைமாமணி ஸ்ரீகலாபரத் மற்றும் தேஜாஸ் குழுவினரின் பரதநாட்டியம், இரவு 12.30 மணி முதல் அதிகாலை 1  மணி வரை திவ்யசேனா குச்சிபுடி, அதிகாலை 1 மணி முதல் 1.30 மணி வரை கலைமாமணி தேன்மொழி இராஜேந்திரன் காவடி ஆட்டம், அதிகாலை 1.30 மணி முதல் 3 மணி வரை  கரகாட்டம் கலைமாமணி தேன்மொழி இராஜேந்திரனின் நையாண்டி மேளம், சிவன் சக்தி ஆட்டம் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை தனியார் தொலைக்காட்சியினர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.