இந்த வாரம் சனிக்கிழமை (பிப்ரவரி,18,2023) மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற விழாவான சிவராத்திரி நாளில் விடிய விடிய கண் விழித்து, விரதம் இருந்து எம்பெருமானை வழிபடுவது வழக்கம். சிவாலயங்களில் நான்கு கால பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.
இந்தியாவில் உள்ளி கோயில்களின் எண்ணிக்கை கணக்கிட்டால் அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்த அளவிற்கு பாரம்பரியம் மிக்க ஆன்மீக தலங்களை கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற, பழம் பெருமை உள்ள சிவன் கோயில்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்
ஆன்மீக தலங்களுள், வரலாற்று தொன்மை மிகுந்தவற்றுள் சிறந்ததாகவும், சோழ வரலாற்று பெருமையின் அடையாளமாகவும் திகழும் கோயில், - தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில். பெருவுடையார் கோயில் என்றழைக்கப்படும் பிரம்மாண்டமான கோயில் கி.பி. 1010 ஆம் ஆண்டு சோழ மன்னன் முதலான் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. மிகப் பெரிய கோபுரம், பெரிய லிங்கம், நந்தி சிலை,கோயிலில் உள்ள கல்வெட்டுகள் உலகிலேயே மிக உயரமான ஆலய கோபுரங்களில் ஒன்று இப்படி பல சிறப்புகளை கொண்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் பிரம்மாண்டம் மாறாமல் இருக்கும் இக்கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் ஒரு பகுதியாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. கட்டுமானம், மிகப் பெரிய கோயில் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இது பார்க்க வேண்டிய கோயில்களில் ஒன்றாக இருக்கிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
தென்னிந்தியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சைவத்திருத்தலங்களில் ஒன்று பழமை வாய்ந்த மயிலை கபாலீசுவர், கற்பாகம்பாள் கோயில். இது ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
பார்வதி தேவி மயில் உருவில் சிவனை இத்தலத்தில் பூஜித்ததால் இது திருமயிலாப்பூர் என்று அழைப்படுகிறது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தலமாக இது நம்பப்படுகிறது.
நெல்லையப்பர் கோயில்
சுயம்புவாக தோன்றிய சிவலங்கத்தை மூலவராக கொண்டிருக்கும் நெல்லையப்பர் கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. புகழ்பெற்ற சில தலங்களில் இதுவும் ஒன்று. சிவனும் சக்தியும் ஒன்று என்பதை கூறுவதும் இத்தலத்தின் சிறப்பாகும். இங்கே கணவன் - மனைவியாக வந்து வழிபடுவது நல்லது என்று நம்பப்படுகிறது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில்
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அழிப்பதற்காக சிவன்பெருமான் நடத்திய திருவிளையாடலால் உருவான தலம் என்று சொல்லப்படுகிறது. காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு பல வராலாற்று கதைகள் உண்டு. சோழர் மன்னன், சிகாமை ஆண்டார், எறிபத்த நாயனார் ஆகியோரை வைத்த புராண கதைகளும் உண்டு. இறைவனுக்குப் பூக்களால் செய்யப்படும் பூஜையின் அருமை குறித்து, சிவத்தொண்டர்களின் பக்தியை உலகிற்குத் தெரியப்படுத்த சிவனின் திருவிளையாடல் நிகழ்வு இந்தக் கோயிலிதான் நடந்தது.
கல்யாணம் மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் இந்தத் தலத்திற்கு வந்து ஆனிலையப்பரை வழிப்பட்டால் நினைத்து நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
பஞ்ச பூத தலங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் உள்ளிட்ட பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்கள். வரலாற்று அடிப்படையில் ஐந்து சிவதலங்களுக்கு தனிச் சிறப்புண்டு.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
பல்லவர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளரிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே இங்கு வழிபாட்டிற்குடையது. பஞ்சபூத தலங்களில் இது முதலாவதாகும். நிலத்தின் பண்புகளை உடையது. இங்குள்ள ஒற்றை மாமரம் மிகவும் பழமையானது. மிக அழகான கட்டிட அமைப்பினை கொண்டது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவராப்பாடல் பெற்ற திருத்தலம்.
இங்கு அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவவரது வேண்டுதல்களும் சித்தியாகிறது. இத்தலத்தில் சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, பார்வதி தெரியாமல், விளையாட்டாக அவரது கண்களை தன் கைகளால் மூடினார். பிறகு உலகில் சூரியன் உதிக்கவில்லை. இயக்கம் நின்றது; தன் தவறை உணர்ந்த பார்வதி சிவபெருமானிடம் மன்னிக்கும்படி வேண்டினாள். பார்வதியின் தவறுக்கு தண்டனையாக காஞ்சியில் தவம் செய்து தன்னை வழிபடும்படுபடி கூறினார்.
இங்கு வந்த பார்வதி மாமரத்தடியில் மணலில் சிவபெருமானாக வடித்து வழிப்பாட்டார்.
திருவண்ணமலை அண்ணாமலையார் கோயில்
ஆன்மீகத்திலும்,வரலாற்றிலும் சிறப்பு வாய்ந்த கோவிலாக திகழ்கிறது அண்ணாமலையார் கோயில்/ பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக உள்ள இது 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. நினைத்தாலே முக்தி தரும் கோயிலாக உள்ளது திருவண்ணாமலைதான். அண்ணாமலையானை நினைப்பதே வாழ்வில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மாவிக்கும் திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, அதை உணர்த்த சிவனின் திருவிளையாடல், சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாகத் தோன்றினர். தன்னை நோக்கித் தவமியற்றிய பார்வதியைத் தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது.) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம் ஆகும். "திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" என்று பக்தர்களால் போற்றப்படும் சிறப்பு வாய்ந்த தலம் இது. கார்த்திகை தீபம் பண்டிகை இங்கு பிரம்மாண்டமாக கொண்டாப்படுகிறது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்
திருவானைக்காவல், அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் திருச்சியில் மாநகரில் காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில். பஞ்சபூதத் தலங்களில் இது நீர் தலம்.
யானை, சிலந்தி ஆகியவற்றின் சிவபக்தியினை கண்டு வியந்த சிவபெருமான் யானையைச் சிவகணக்களுக்கு தலைவகாக ஆக்கினார். இந்தக் கதையினால் உருவான தலமாக விளங்குகிறது.
ஜம்புகேஸ்வரர் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் சுரப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கோடை காலங்களிலும் கூட இங்கே தண்ணீர் வற்றுவதில்லை. அகிலாண்டேஸ்வர்ரியாக பார்வதி காட்சி தருகிறார்.
இங்கே உள்ள ஜம்புலிங்க அகிலாண்டேஸ்வரியால் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில்
பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாய தலமாகும். சைவத்தலங்களில் மிகவும் முக்கியமானதாகும். ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் காட்சியளுக்கும் தலம் இது. முதலாவது தேவராத்தலம். இந்த நடனத்தின்படி, ஆக்கல், அழித்தல் காத்தல் என்ற விதியினை அடிப்படையாக கொண்டது. இங்கு வந்து நடராஜரை தரிசித்தால் மன அமைதி கிட்டும் என்றும் கூறப்படுகிறது.
திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்
ஆந்திராவின் சித்தூரில் உள்ள காளகத்தியப்பர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் வாயு தலாமாகும். இக்கோவில் சம்பந்தரால் பாடப் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.
சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரல சீகாளத்தி என்று பெயர் பெற்றது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் இத்தலத்திற்கு வந்து செல்வது வழக்கம். இது கண்ணப்பர் வழிப்பட்ட தலம் என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்று ஏராளமான சிவதலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அங்கு சென்று சிவனை வழிபடலாம்.