”உசிலம்பட்டி அருகே கருப்பசாமி, அய்யனார் கோயிலின் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிலை எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர் “.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியை அடுத்துள்ள வாகைக்குளம் கிராமத்தின் கண்மாய் கரையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தொட்டியங்கருப்ப சாமி, அய்யனார் சாமி திருக்கோவில். நினைத்ததை நிறைவேற்றும் காவல் தெய்வமாக உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் நடைபெறும் புரட்டாசி பொங்கல் திருவிழா பெரிய வாகைக்குளம், சின்ன வாகைக்குளம் கிராம மக்களால் சாதி மத பேதமின்றி வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

 





 

இந்த ஆண்டிற்கான திருவிழா வெகுவிமர்சையாக துவங்கியது இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிலை எடுப்பு திருவிழா இரண்டாம் நாளான  நேற்று நடைபெற்றது. இந்த சிலை எடுப்பு திருவிழாவில் கருப்பசாமி மற்றும் அய்யனாரிடம் குழந்தை வரம், தொழிலில் முன்னேற்றம், உடல் ஆரோக்கியம் என வேண்டும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை நிறைவேற்றித் தருவதாக நம்பப்படுகிறது.

 



 

அவ்வாறு நினைத்தது நிறைவேறிய பக்தர்கள் சிலை எடுத்து சென்று சாமியை வழிபடுவது வழக்கமாக உள்ளது, அவ்வாறு  பெரிய வாகைக்குளம் மந்தையில் கருப்பசாமி, அய்யனார், குழந்தைகளின் உருவம், பெண் தெய்வங்கள், காவல்துறை அதிகாரி சிலை, காவலுக்காக நாய் என நூற்றுக்கணக்கான சிலைகளை வேண்டுதலுக்காக வடிவமைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டு ஊரின் முக்கிய விதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவிலை வளம் வந்து சிலைகள் இறக்கி வைக்கப்பட்டு வேண்டுதல் நிறைவேற்றப்பட்ட பின் கண்மாயில் கரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.





இதுகுறித்து உசிலம்பட்டி பகுதியியைச் சேர்ந்த செந்தில் வேல் கூறுகையில்..,” தொட்டியங்கருப்ப சாமி, அய்யனார் சாமி திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது இங்கு உசிலமபட்டி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்தாண்டு திருவிழாவின் போது வீடு கட்ட வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுதல் நிறைவேறும் விதமாக பெரிய அளவி வீடு கட்டிவேட்டேன். இதனால் குடும்பத்துடன் வந்து நேத்திக்கடன் செலுத்தினோம். ஏராளமானோர் இந்தாண்டு திருவிழாவில் கலந்துகொண்டனர். எங்களைப் போல் ஆண்டுதோறும் வேண்டுதல் நிறைவேறிய பின் ஒவ்வொருவரும் வேண்டுதல் அடிப்படையில் தங்களது நேத்திக்கடனை செய்வார்கள்” என்று நம்மிடம் தெரிவித்தார்.