ரஜினியின் 50 ஆண்டு கால திரைத் துறையின் பயணத்தை 360° கோணத்தில் காட்சிப்படுத்திய ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியின் தீவிர பக்தியால் தொடர்ந்து சேவையும் செய்து வருகிறார்.
மதுரை ரஜினி ரசிகரின் உருவ வழிபாடு
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவரது ஏற்பாட்டில் நடிகர் ரஜினிக்கு கோயில் கட்டி இரண்டு உருவச் சிலைகள் அமைத்து கோயிலாக செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரஜினிகாந்த் உருவ சிலைக்கு தினந்தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.
171 திரைப்படங்களில் இருந்து 5 ஆயிரம் புகைப்படங்கள்
இந்நிலையில் 50 ஆண்டுகாலம் திரைத்துறையில் சாதனை படைத்த ரஜினிகாந்த் உடல், ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி. ரஜினி கோயிலில் ரஜினிகாந்த் நடித்த 171 திரைப்படங்களில் இருந்து 5 ஆயிரம் புகைப்படங்களை App உதவியுடன் பதிவிறக்கம் செய்து, கோயில் முழுக்க 360 டிகிரி கோணத்தில் சுவர் முழுவதும் திரும்பும் பக்கமெல்லாம் ரஜினிமுகம் தெரிவது போல ஒட்டியுள்ளார். இதனை தொடர்ந்து ரஜினி கோயிலில் ரஜினியின் இரு உருவச் சிலைகளுக்கும் பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர்.
ரஜினி கோயிலை பார்த்த ரசிகர் நெகிழ்ச்சி
மேலும் கோயிலுக்கு வந்திருந்த பக்தர் ஒருவர் நம்மிடம் பேசுகையில்..,” தலைவர் ரஜினிக்கு கோயில் கட்டியுள்ளது பெருமையாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன் ரஜினி கோயில் குறித்து கேள்விப்பட்டேன். ஆனால் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினிமீது ஒரு ரசிகன் அன்பு எவ்வளவு வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது. தொடர்ந்து ரஜினி கோயிலுக்கு கார்த்திக் அண்ணன் பூஜை செய்து வருகிறார். இது எங்களை நெகிழ்ச்சியடை செய்கிறது. தலைவர் ரஜினி மறைமுகமாக மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். இந்நிலையில் தலைவர் ரஜினிக்கு மறக்காமல் தினமும் திருமங்கலத்தில் பூஜை நடக்கிறது. அடிக்கடி இனி ரஜினி கோயிலுக்கு வரவேண்டும் என நினைத்துள்ளேன். ரஜினிகாந்த் பெயரில் கார்த்தி அவர்களிடன் குடும்பத்தினர் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து ரஜினி ரசிகர்களும் சேவை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.