கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. 


 






இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.  இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர். வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார்.




 இதனையடுத்து ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதனையடுத்து ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக தோப்பறைகளை பயன்படுத்தி நீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதனையடுத்து அங்கிருந்து புறப்பாடாகி வண்டியூர் பகுதிகளல் உள்ள மண்டகப்படிகளில் எழந்தருளினர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kallazhagar Festival: ’வாராரு வாராரு அழகர் வாராரு’... பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..!











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண