ஞானசேகரனிடன் சில போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எல்லா வேலையும் அண்ணாமலையே செய்ய முடியாது, நான் மோப்பநாய் கிடையாது. யார் அந்த சார் என்பதை முதலில் சொல்லுங்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

 

மதுரை அ.வள்ளாலபட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை., “மோடி  எப்போதும் விவசாயிகளின் பக்கம் ஏழைகளின் பக்கம் வளர வேண்டிய சமுதாயத்தின் பக்கம் எப்போதும் இருப்பவர். மேலூர் பகுதி இந்த கிராமம் எல்லாம் உள்ளடக்கிய இந்த  டங்க்ஸ்டன் திட்டம் 4980 ஏக்கரில் பல்லுயிர் தளம் உள்ளடக்கிய பகுதியும் சேர்ந்து மத்திய அரசு டங்க்ஸ்டன் ஏலத்திற்கு கொண்டு வருவதற்கான காரணம் மாநில அரசு ஒப்புதல் கொடுத்த ஒரே காரணத்திற்காகத்தான். எப்போது கிராம மக்கள் இதனை வேண்டாம் என்று சொன்னார்களோ, அந்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு 23 ஜனவரி 2025-ல் இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. இது இந்தியாவிலேயே ஆச்சரியம், ஒரு மத்திய அமைச்சர் அவர்கள் கிராமத்திற்கு வந்து கிராம மக்களுடைய அன்பை எல்லாம் ஏற்றுக்கொண்டு  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இங்கு என்ன நடந்தது என்று சொல்வதற்கு ஒரு வாய்ப்பு.

 

திமுக அரசை பார்த்து பயப்பட போகிறாரா?

 

தீர்மானம் போட்டால் எத்தனை தீர்மானம் போட்டு எதனை எடுத்துள்ளோம். தீர்மானம் போடுவதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. என்னவெல்லாம் தீர்மானம் போடலாம் உப்புக்கு சப்பில்லாததெல்லாம் தீர்மானம் போடுகிறார்கள். எங்களை பார்த்து மத்திய அரசு பயந்துவிட்டார்கள் என்கிறார்கள், உக்ரைன், ரஷ்யாவை  பார்த்து பயப்படாத மோடி, திமுக அரசை பார்த்து பயப்பட போகிறாரா ? மக்களுடைய அன்பு மக்களுடைய குரல், மக்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்கள் அதனால் செய்கிறோம். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம் யார் கழுத்துல வேண்டுமானாலும் மாலைகள் போடலாம், அதைப்பற்றி எண்ணமும் கிடையாது யாருக்கு வேண்டுமானாலும் பண்ணலாம்.

 

யார் இந்த சார்?

 

யார் இந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பத்திரிகையாளர்களை கூப்பிட்டிருக்கிறார்கள் ஞானசேகரனின் மொபைல் ரெக்கார்ட் என்னிடம் உள்ளது. 23 டிசம்பர் யாரிடம் பேசினார் என்ற ரெக்கார்டு என்னிடம் உள்ளது. 24 யாரிடம் பேசினார் என்பது உள்ளது. அதில் சில போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். எல்லா வேலையும் அண்ணாமலையே செய்ய முடியாது. நான் மோப்பநாய் கிடையாது. யார் அந்த சார் என்பதை முதலில் சொல்லுங்கள். சட்டத்திற்கு புறம்பாக தான் நான் சி டி ஆர் எடுத்தேன். சி டி ஆர் எடுப்பதற்கு அதிகாரம் இல்லை. ஆனால் சி டி ஆர் என்னிடம் இருக்கிறது. ஞானசேகரனின் ஒரு வருட கால் ரெக்கார்டு என்னிடம் உள்ளது. யார் யாரிடம் பேசினார் எத்தனை முறை பேசினார் 23ஆம் தேதி குற்றம் செய்த பிறகு யாரிடம் பேசினார் 25ஆம் தேதி தான் எஃப்ஐஆர் போட்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் நான் ஒரு நாள் வெளியிட தான் போகிறேன், பொறுமை காக்கின்றேன். வேங்கவயல் விவகாரத்தில் யாராவது ஆடியோவை நம்புவார்களா செட்டிங் செய்து இருவரை பேச வைத்து வெளியிடுவது நியாயமா? ஏழை மக்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை சி.பி.ஐ., வசமும் கொடுக்கமாட்டிக்கிறீர்கள் என்றார்.