மதுரை சித்திரைத் திருவிழா எப்படி நடைபெறுகிறது?.. என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படும்?
உலகளவில் பெருமை வாய்ந்த சித்திரைப் பெருவிழாவை மிகச்சிறப்புடன் நடத்திட அனைத்துத்துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும்.
Continues below advertisement

சித்திரைத் திருவிழா
பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை உறுதி செய்திடல் வேண்டும்.
சித்திரைப் பெருவிழா- 2025 தொடர்பான முன்னேற்பாடு பணிகள்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தலைமையில், மதுரை சித்திரைப் பெருவிழா- 2025 தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, தெரிவித்ததாவது..,” மதுரை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான சித்திரைப் பெருவிழா அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 29.04.2025-அன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகிய நிகழ்வுகள் இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக உள்ளது.
போதிய சி.சி.டி.வி கேமராக்கள்
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைப் பெருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு போதிய முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது அவசியம். குறிப்பாக, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வாகன நிறுத்தம், மக்கள் திரள் ஆகியவற்றை முறைப்படுத்திட காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதிய சி.சி.டி.வி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை அதிகரித்திட வேண்டும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்வில் பங்கேற்பதற்கு வழங்கப்படும் அனுமதி அட்டையை முறையே பரிசோதித்து அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே அனுமதித்திட வேண்டும். இதில் எவ்வித பாகுபாடும் இருக்கக் கூடாது.
பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும்
மேலும், திருத்தேரோட்ட நிகழ்விற்கு முன்பு திருத்தேரின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணித்துறையின் சான்றிதழ் பெற்றிட வேண்டும். திருத்தேர் செல்லும் வழி, அருள்மிகு கள்ளழகர் ஊர்வலம் வரும் வழிகளை முறையே கண்காணித்து தாழ்வான நிலையில் மின் விநியோக கம்பிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை உறுதி செய்திடல் வேண்டும். அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய மருத்துவக்குழுக்கள் அமைத்திட வேண்டும். அரசு இராசாசி மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். உலகளவில் பெருமை வாய்ந்த சித்திரைப் பெருவிழாவை மிகச்சிறப்புடன் நடத்திட அனைத்துத்துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும்.
அதிகாரிகள் கூட்டம்
மதுரை மாநகர் மற்றும் வைகை ஆற்றுக்குள் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் அதிகமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மதுரையை நோக்கி வருவதால், மேம்பாலம் கட்டுமானப் பணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும். இதனைத் தவிர்க்க, விழா காலத்தில் மாற்றுப்பாதைகள், வாகன கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது பாதுகாப்பு துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி அவர்கள் உட்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Continues below advertisement