தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கள்ளழகர் கோயில்  சித்திரைப் பெருந்திருவிழா மே மாதம் தொடங்கி 10 நாட்கள் விழாவாக நடைபெறவுள்ளது.


சித்திரைப் பெருந்திருவிழா - முகூர்த்த விழா


கள்ளழகர் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 27 ஆம் தேதியன்று  காலை  தல்லாகுளம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சியும் அதனைதொடர்ந்து பிற்பகலில் மதுரை வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.

 


மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும்


 

இதனைத் தொடர்ந்து சித்திரைத் பெருவிழாவிற்கான பணிகள் தொடங்கும். இதனையடுத்து வரும் மே 8 மற்றும் 9 ஆம் தேதி கள்ளழகர் தோளுக்கினியானில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுத்தருளி திருவாராதனம் மற்றும் கோஷ்டி முடித்து சன்னதிக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறும். 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் அழகர்கோவில் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மதுரைக்கு புறப்பாடாகும் நிகழ்ச்சி நடைபெறும்.

 

எதிர்சேவை - ஆற்றில் எழுந்தருளல்

 

பின்னர் விழாவின் நான்காம் நாள் நிகழ்வாக மே 11 ஆம் தேதி மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடைபெறும் இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக சித்ரா பௌர்ணமி நாளில் மே 12 ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் நடைபெறும். பின்னர் 13 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு அதனை தொடர்ந்து நள்ளிரவில் தசாவதாரம் நடைபெறும். 14 ஆம் தேதி தல்லாகுளம் பகுதியில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும். 15 ஆம் தேதி அழகர்மலைக்கு புறப்பாடு ஆகுதல், 16 ஆம் தேதி சன்னதி திரும்புதல் நிகழ்வு நடைபெற்று 17 ஆம் தேதியன்று விழாவின் இறுதி நிகழ்வாக உற்சவ சாற்று முறையுடன் 10 நாட்கள் விழா நிறைவுபெறவுள்ளது.

 

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருவிழா

 

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான சைவ - வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவில ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் விழாவாக நடைபெறவுள்ளது. மே 06 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 08 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், மே 09ஆம் தேதி மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவின் போது மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம் நடைபெறும் நாளில் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் போது திருத்தேரோட்டம் நடைபெற்ற பின்னர் ஒரு நாள் கடந்து 11ஆம் தேதி காலை கள்ளழகர் எதிர்சேவை நடைபெறவுள்ளதும் குறிப்பிடதக்கது. 

 

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ள சித்திரை பெருவிழாவிற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.