இந்து மதத்தில் விநாயகப் பெருமான் முழு முதற் கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவரை வழிபடாமல் நாம் எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்குவதில்லை.
தடைகளை தகர்க்கக்கூடியவர் விநாயகர் என்ற ஐதீகம் அனைவரிடத்திலும் உள்ளது. இப்படியான விநாயகருக்கு ஆனைமுகன், கணபதி, பிள்ளையார் என ஏகப்பட்ட பெயர்கள் உண்டு. அவருக்கென பல்வேறு விசேஷ தினங்களும் உள்ளது. குறிப்பாக சதுர்த்தி விரதம்,சங்கடஹர சதுர்த்தி ஆகியவை ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க விசேஷ தினமாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் சங்கடஹர சதுர்த்தி நாளில் நாம் விரதமிருக்கும் வழிமுறைகளையும், வழிபாடு செய்யும் பின்பற்ற வேண்டியவைப் பற்றியும் காணலாம்.
சங்கடஹர சதுர்த்தி பின்னணி
சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகருக்கு உகந்த புனித நாளாக பார்க்கப்படுகிறது. சங்கடம் என்றால் கஷ்டம்,துன்பம் என்பது பொருளாகும். ஹர என்றால் அழித்தல் என அர்த்தமாகும். இந்த திதியானடு ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் பௌர்ணமிக்கு பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதியில் வருகிறது. இந்த விசேஷ தினம் செவ்வாய்கிழமை வந்தால் அங்காரக சங்கஷ்டி சதுர்த்தி என அழைக்கப்படுகிறது.
பொதுவாக எந்தவொரு விசேஷ நாள் இருந்தாலும் விரதம் இருந்து வழிபடுவது நம்முடைய பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. அப்படியான வகையில் விநாயகர் எளிமையின் உருவம் என்பதால் அவருக்குரிய விரதமும் மிக எளிமையானது. இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
விரதம் இருப்பது எப்படி?
அப்படியான சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். பின்னர் வீட்டின் பூஜையறையில் உள்ள விநாயகர் சிலை அல்லது புகைப்படத்தை மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். காலை முதல் மாலை வரை விரதம் இருக்கலாம். உடல்நலம் முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் தொடங்கலாம். அன்றைய நாளில் மாலையில் தான் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஆனால் பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களால் அனைவராலும் மாலையில் கோயில் செல்ல முடியாது. எனவே ஏதேனும் ஒரு வேளையில் கோயிலுக்கு செல்லலாம். இன்றைய நாளில் வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறைந்தப்பட்சம் அருகம்புல் வாங்கியாவது வழிபட வேண்டும். வீட்டில் வழிபடுவதாக இருந்தால் சுண்டல், கொழுக்கட்டை என விநாயகருக்கு உகந்த உணவுப் பொருட்களைப் படைக்கலாம்.
இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷங்கள் அகலும். திருமணத் தடை, குழந்தைபேறு ஆகியவற்றில் நல்ல செய்தி வந்து சேரும். சகல சௌபாக்கியங்கும் பெற்று நலமுடன் வாழ்வீர்கள். நீங்கள் விரதம் இருப்பவர்களாக இருந்தால் சதுர்த்தி திதி தொடங்கிய நிமிடத்தில் இருக்கலாம். இல்லாவிட்டால் அன்றைய நாளின அதிகாலையில் இருந்து இருக்கலாம். விரதம் மேற்கொள்பவர்கள் வீட்டில் காலை, மாலை என இருவேளைகளிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். மாலை பூஜை செய்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.