முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் கோவிலில் சுப்பிரமணிய சாமி பங்குனி பெருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சன்னதியில் அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் மண அலங்காரம் நடைபெற்றது.  தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அதேசமயம் மதுரையிலிருந்து பிரியாவிடையுடன் சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் சந்திப்பு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.  அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 



 

அதன்பின்னர் சுவாமிகள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். சந்திப்பு மண்டபத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கோயில் வரை வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து சுவாமிகளை வழிபட்டனர். பின்னர் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் முதலில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பிற்பகல் 12.20 மணியளவில் மணக்கோலத்தில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுடன் எழுந்தருளினர். அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணியசாமி- தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.



 

முன்னதாக கள்ளழகர் கோயில் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலையில் இருந்து திருமணத்திற்கு சீர்வரிசைப்பொருள்கள் வந்து சேர்ந்தன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.  இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து கோயிலில் பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டனர் .விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

 











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண