சென்னையில் நடைபெற்ற லக்ஷ்மிநாராயணா குளோபல் இசை விழாவில் நடந்த  புகழ்பெற்ற வயலின் கலைஞர்களில் ஒருவரான  டாக்டர்.எல். சுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 


மார்கழி மாதம் என்றாலே இசைப்பிரியர்கள் மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் சென்னையில் நடைபெறும் இசை விழா  தான் நியாபகத்திற்கு வரும்.  இங்குள்ள இசை சபாக்களில் பழம்பெரும் இசைக்கலைஞர்கள் முதல் இளம் கலைஞர்கள் வரை அனைவரது கச்சேரிகளும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற ரசிக ரஞ்சனி சபா ஆடிட்டோரியத்தில் ‘லட்சுமிநாராயணா குளோபல் மியூசிக் விழா’ தொடங்கியது.


புகழ்பெற்ற வயலின் கலைஞர்களில் ஒருவரான பத்மபூஷன் விருதுபெற்ற டாக்டர்.எல். சுப்ரமணியம்  தனது தந்தை லட்சுமி நாராயணா நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 1992 ஆம் ஆண்டு சென்னையில் பழம்பெரும் இசைக்கலைஞர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் செம்மங்குடி ஐயர் ஆகியோர் முன்னிலையில் இந்த இசை விழா முதன்முதலில் தொடங்கப்பட்டது.



நடப்பாண்டு இசை விழாவின் தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  டாக்டர் எல்.சுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வையாளர்களின் செவிகளுக்கு இசை விருந்தளித்த அவர், "சஹானா" ராகத்தில் தொடங்கி பின்னர் "சுப பந்து வராளி" ராகத்துடன் முடித்தார். இது பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத இன்னிசை விருந்தாக அமைந்தது.  இதனைத் தொடர்ந்து நமது ஏபிபி நாடுடன் பேசிய சுப்பிரமணியம், “இது இசை விழாவின் ஆரம்பம் மட்டுமல்ல, தனது தந்தையும் பழம்பெரும் வயலின் பேராசிரியருமான வி.லட்சுமிநாராயணாவுக்கு செய்த புகழஞ்சலி” என தெரிவித்தார். 


மேலும் “சென்னையில் பிறந்து வளர்ந்துள்ளேன். இங்குள்ள ரசிகர்களின் ரசனை தனக்கு தெரியும்” என்றும் அவர் கூறினார். “என்னுடைய இளமை காலத்தில் நானே ஒரு ரசிகனாக பல கச்சேரிகளுக்குச் சென்றிருக்கிறேன். என் வாழ்நாளின் பல வருடங்களை இங்குதான் கழித்திருக்கிறேன். தற்போது ஒவ்வொரு ஆண்டும் என் தந்தையின் நினைவாக இந்த விழாவை நடத்தி வருகிறேன். சென்னையில் டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி, 20ஆம் தேதி கொச்சியிலும்,  21ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், 22ஆம் தேதி ஆலப்புழாவிலும் நடைபெற்றது. 


மேலும் வரும் ஜனவரி 26 பெங்களூருவிலும் மற்றும் புனேவில் ஜனவரி 28 ஆம் தேதியும் நடைபெற உள்ளது” டாக்டர்.எல். சுப்ரமணியம் கூறினார். சுமார் 1 மணி நேரம் நடந்த டாக்டர் எல்.சுப்ரமணியம் இசை நிகழ்ச்சி நடப்பாண்டு மார்கழி மாத இசை விழாவின் சிறப்பான ஒன்றாக அமைந்தது என்றே சொல்லலாம்.