தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர்.
கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஈஷாவிற்கு வரும் மக்களின் தினசரி எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
மேலும், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களின் வருகையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குழுவாக வரும் அந்த பக்தர்கள் சமைத்து உண்பதற்காக, வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகிலேயே தனி இடவசதியும், கூடுதலாக இலவச கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈஷாவிற்கு வரும் மக்கள் பெரும்பாலும் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகளை பயன்படுத்துகின்றனர். இது கோவையின் சுற்றுலா சார்ந்த போக்குவரத்து துறையின் வருமானத்தில் கணிசமான பங்கு வகிக்கிறது.
மேலும், ஆதியோகிக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்துள்ள பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வருவாய், உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளின் வருவாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம், கோவையில் ஆன்மீக சுற்றுலாவுடன் தொடர்புடைய நேரடி மற்றும் மறைமுக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.