காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடந்த லட்சதீப விழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் லட்சதீப விழா
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் லட்சதீப விழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தை ஒட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்களில் லட்சதீப விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இவ்வாண்டிற்கான லட்சதீப விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை ஒட்டி மூலவர் மற்றும் உற்சவர் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதே போல திருக்கோவில் உட்பிரகாரத்தினை சுற்றியுள்ள லிங்களுக்கு அபிஷேகங்களானது நடைபெற்றது. அதனைத் தொடர்ந்நு ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மையாருக்கு தூப, தீப ஆராதனைகளானது நடைபெற்றது.
பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம்
இந்த லட்ச தீபம் விழாவையொட்டி திரளான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகைதந்து கோவில் உள் மற்றும் வெளி பிரகாரங்களிலும், நந்தி மணிடபம் ஆகிய இடங்களில் பல்வேறு வடிவிலான கோலமிட்டு அதன் மீது விளக்குகளை ஏற்றியும், அதேபோல சிவ வடிவிலான கோலங்கள் வரைந்து அதன் மீது திருவிளக்குகளை வைத்து சிவ வடிவில் தீபங்களை ஒளிர செய்தும் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தல வரலாறு கூறுவது என்ன ?
புராணப்படி இக்கோவில் உருவானதற்கு முக்கிய கதை ஒன்று கூறப்படுகிறது. ஒருமுறை பார்வதி, சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடியதால் உலகமே இருண்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான ஜீவராசிகள், பாதிப்படைந்தனர். இதனைத் தொடர்ந்து சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்து உலகத்திற்கு வெளிச்சம் தந்தார் என நம்பப்படுகிறது.
பார்வதியின் விளையாட்டால், பார்வதி மீது சிவன் கோபம் கொண்டார். இதனைத் தொடர்ந்து பார்வதி பூலோகம் வந்து, சிவபெருமானின் கோபம் குறைய வேண்டி சிவபெருமானை நோக்கி, தவமிருந்தார். மணல் லிங்கம் செய்து, மாமரத்தின் அடியில் பல ஆண்டுகள் பார்வதி தான் தவமிருந்ததை கண்டு சிவபெருமான் வியந்தார். அவரது தவத்தை உலகம் அறியும் வகையில், சிவபெருமான் கம்பா நதியில்Ekambareswarar Temple வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து, செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார்.
சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதி தேவிக்கு காட்சியளித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மாமரம் தான் கோவிலின் தல விருச்சகமாக இருந்து வருகிறது. பார்வதி தேவி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை "தழுவக் குழைந்தார்" என்றும் அழைப்பதுண்டு. இக்கோவில் சிவன் மற்றும் பார்வதி ஆகிய இருவருக்கிடையே இருந்த காதலை வெளிப்படுத்தும் கோவிலாகவும் பார்க்கப்படுகிறது.