குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தைக்காண  10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் நவராத்திரி விழா, தசரா திருவிழாவாக மைசூருக்கு அடுத்தப்படியாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  தசரா திருவிழாவையொட்டி செப்டம்பர் 25-ம்தேதி பகல் 11 மணிக்கு காளி பூஜையும், மாலை மகுட இசையும், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. 26-ம் தேதி காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதியுலாவும், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9.30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது.




இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 27-ம்தேதி கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்திலும், 28-ம்தேதி ரிசபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 29-ம் தேதி மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 30-ம் தேதி காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணனர் திருக்கோலத்திலும், அக்டோபர் 1-ம் தேதி சிம்ம வாகனத்தில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்திலும், 2-ம் தேதி பூஞ்சப்பரத்தில் ஆனந்தநடராஜர் திருக்கோலத்திலும்,  3-ம் தேதி கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்திலும், 4-ம் தேதி அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் திருவீதியுலா வரும் நிகழ்வு நடந்தது.




நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு நடந்த சூரசம்காரத்தை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க ஓம் காளி ஜெய் காளி என்ற கோஷத்துடன் கடற்கரைப் பந்தலில் நள்ளிரவு 12 மணிக்கு எழுந்தருளினார். கடற்கரையில் அமைக்கபட்டிருந்த முதல் பந்தலில் நள்ளிரவு 12.05 மணிக்கு மகிஷன் தன் தலையும், இரண்டாம் பந்தலில் நள்ளிரவு 12.11 மணிக்கு சிம்மத் தலையும், மூன்றாம் பந்தலில் நள்ளிரவு 12.18 மணிக்கு எருமைத் தலையும்,  நான்காம் பந்தலில் நள்ளிரவு 12.24 மணிக்கு சேவல் தலையும் வெட்டப்பட்டன. இந்நிகழ்வில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.




 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண