தென் மாவட்டங்களில் பிரசித்த பெற்ற குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் அருள்மிகு சோனை முத்து கருப்பண்ண சுவாமிக்கு 2,000 மேற்பட்ட மதுபாட்டிகள் 34 சேவல், 45 ஆடுகள் பலியிட்டு சாமிக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் கோவிலில் சனீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஒரே இடமாக குச்சனூர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது தோஷங்கள் நீங்க நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா நடப்பதற்கான கொடியேற்றம் நடைபெறவில்லை. ஆனால் தற்போது ஆடி மாதத்தின் 5 சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்த ஆண்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் கொடி கம்பம் மற்றும் உப தெய்வங்கள் பாலாலயம் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெறவில்லை, ஆனால் ஆடி மாதத்தின் 5 சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது மேலும் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த ஆண்டு ஆடி மாத சனிக்கிழமையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அவர்கள் கோவில் முன்பு ஓடும் சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றி, உப்பு, பொரியுடன் சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் மண் காகத்தினை வைத்து வழிபட்டனர். விழாவின் ஒரு நிகழ்வாக கோவில் வளாகத்தில் உள்ள சோனை முத்து கருப்பண்ண சுவாமிக்கு மது மற்றும் அசைவ படையலிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி 2,000-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை நேர்த்திக்கடனாக செலுத்தினர்.
இதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வந்த மது பாட்டில்களை இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தங்களது பெயருடன் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் மதுபாட்டில்களை இரவு பூஜைக்கு வழங்கினர். இதையடுத்து சாமிக்கு மதுபாட்டில்கள் படையலிடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேர்த்திக்கடனாக செலுத்திய 34 சேவல், 45 ஆடுகள் சாமிக்கு பலியிடப்பட்டது. இதையடுத்து சேவல், ஆட்டு இறைச்சியை சமைத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.