ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலில் வருடத்தின் பல்வேறு மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஆனால் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் இரவு தங்கி முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்று ஐதீகம். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தனர்.
இதற்கிடையில் பௌர்ணமியை முன்னிட்டு சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவிற்காக திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்றனர். இரவு நேரத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர். இவர்கள் இரவில் கடற்கரைப் பகுதியில் குடும்பம் குடும்பமாக சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் கடற்கரை மணலில் விளக்குகள் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பௌர்ணமி என்பதால் திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிகிறது. அதன் மேல் பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் செல்பி எடுத்து வருகின்றனர். கோவில் கடற்கரை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.