இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள ஈ.சி.ஆரில் இஸ்கான் கோயில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாட உள்ளதாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ISKCON) அறிவித்துள்ளது.


இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி:


கிருஷ்ணரின் 5251வது பிறந்தநாள் என்றும் இதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாலை 6 மணிக்கு சம்பிரதாய அபிஷேகமும், அதைத் தொடர்ந்து நள்ளிரவில் மகா அபிஷேகமும் நடைபெறும். இந்த புனித சடங்கின் போது, கிருஷ்ணரின் திருவுருவங்களுக்கு பால், தேன், தயிர், நெய் மற்றும் பழச்சாறுகளின் கலவையான பஞ்சாமிர்தத்தில் அபிஷேகம் செய்யப்பட உள்ளது.


கிருஷ்ணர் நள்ளிரவிலே அவதரித்தார் என்பதால் விழாவின் சிறப்பம்சமாக, நள்ளிரவில் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. மகா அபிஷேகத்துடன் பல்வேறு பக்திச் செயல்கள், சொற்பொழிவுகள், ஆரத்தி, கீர்த்தனைகள் நடைபெற உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.


கோகுலாஷ்டமியை முன்னிட்டு பூஜைகள், வழிபாட்டிற்குத் தேவையான அகர்பத்தி, விக்ரகங்கள், உடைகள், குழந்தைகள் உடைகள், பைகள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கும் பரிசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிருஷ்ண ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாட பக்தர்களும் வழிபாட்டில் பங்கேற்க இஸ்கான் கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


நாளை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால் கடந்த சில நாட்களாகவே வைணவ தலங்கள் களைகட்டி காணப்படுகிறது.  வட இந்தியாவைப் போலவே தமிழ்நாட்டிலும் சில ஆண்டுகளாகவே கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுவதால் பூஜைக்கான பொருட்கள் விற்பனை கடந்த சில நாட்களாக சூடுபிடித்தள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.