கரூர் சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் கம்பம் நடும் விழா நான்கு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


 



 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஆதி மாரியம்மன் ஆலயத்தில்  8 கிராம ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனி மாத திருவிழாவை நடத்த முடிவு செய்து, அதன் முக்கிய நிகழ்வாக அமராவதி ஆற்றில் இருந்து கம்பம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது. ஆதி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க மாரியம்மன் கம்பத்தை அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் சென்றனர். மாரியம்மன் கம்பத்திற்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேல தாளங்கள் முழங்க மாரியம்மன் கம்பம் மற்றும் கரகம் பாலிக்கப்பட்டது. வெள்ளை குதிரை துலுக்கியவுடன் கோவில் பூசாரி அருளுடன் கம்பத்தை தோளில் சுமந்தவாறு வானவேடிக்கையுடன் ஆதி மாரியம்மன் கம்பம் மற்றும் கரகம் அமராவதி ஆற்றில் இருந்து ஆலயம் வந்தடைந்தது.


 




ஆலயம் வந்த பிறகு மீண்டும் வெள்ள குதிரை (இரண்டு மணி நேர ) காத்திருப்புக்கு பின்னர் துலுக்கியது. கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் மாரியம்மன் கம்பம் நடும் விழா சிறப்பாக தொடங்கியது. தொடங்கிய மாரியம்மன் திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை ஆதி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பூத்தட்டு (பூச்செரிதல் ) நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தான்தோன்றி மலை, காளியப்பனூர், ராமா கவுண்டனூர், குடித்தெரு, திருமாலையூர் உள்ளிட்ட 8 கிராம ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.