கரூர் அருகே கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழாவில் ஆண்கள், பெண்கள் சிறுவர், சிறுமியர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினார்கள்.
கரூர் மாவட்டம், காக்காவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கோவில் வளாகத்தில் இருந்து முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோவில் மைதானத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
பின்னர் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினர். அதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து ஒயிலாட்டம் ஆடினர்.
இதில் கொங்கு ஒயிலாட்டம், ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திரளான மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.