குளித்தலை அருகே மேல குட்டப்பட்டியில் கருவையன் அய்யனார் சுவாமி கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலகுட்டப்பட்டியில் கருவையன் அய்யனார், விநாயகர், முருகன், அக்னி பாப்பாத்தி அம்மன், பனையடியான் தேரடி கருப்பு, லாட சன்னாசி, மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் முடிவு செய்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜனவரி 25ஆம் தேதி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
புனித நீர் அடங்கிய கும்பத்திற்கு சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட இரண்டு கால யாகவேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை ஊர்வலமாக கொண்டு சென்று கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.
பின்னர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகளை செய்து பக்தர்களுக்கு புனித நீரினை தெளிக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். இதில் மேல குட்டப்பட்டியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.