கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபம் ஆகும். சிவ பக்தர்களுக்கு கொண்டாட்டமான பண்டிகையாக திருக்கார்த்திகை தீபம் திகழ்கிறது. உலகெங்கும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் கார்த்திகை தீபம் கோலாலகமாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீபம் எப்போது?
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் டிசம்பர் 4ம் தேதி ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கான பரணி தீபம் டிசம்பர் 13ம் தேதியான வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்றப்பட உள்ளது. அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை மகா தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை தீபம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் முதல் கோயில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகும். பஞ்சபூத தலங்களில் முதன்மையானதும், அக்னி தலமாகவும் திகழும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
களைகட்டும் திருவண்ணாமலை:
கார்த்திகை மாதம் பிறந்தது முதலே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கியது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி மகாதேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதற்காக, ராஜகோபுரம் உள்ளிட்ட அண்ணாமலையார் கோயிலை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழாவை காண சுமார் 35 லட்சம் மக்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
முருகன் கோயில்களிலும் கொண்டாட்டம்:
கார்த்திகை தீப நாளில் கோயிலின் உள்ளே அதிகாலையில் பரணி தீபத்தை காண 7 ஆயிரத்து 500 பேருக்கும், மாலையில் மகா தீபத்தை காண 11 ஆயிரத்து 500 பேருக்கும் அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகாதீபத்த காண மலையேறும் பக்தர்களுக்கு உடல் பரிசோதனைக்கு பிறகே அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை தீபத் திருநாளை சிவாலயங்கள் மட்டுமின்றி முருகப் பெருமானின் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்படும்.
முன்னேற்பாடுகள் தீவிரம்:
கார்த்திகை தீபத் திருநாளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்கள் வசதி உள்ளிட்டவற்றிற்கான முன்னேற்பாடுகளை காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்தந்த கோயில் நிர்வாகங்கள் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும், அறுபடை வீடுகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.