கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு மிக மிக உகந்த மாதமாக திகழ்கிறது. கார்த்திகை மாதம். என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபம். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள்.


கார்த்திகை தீபம்:


அந்த நாளில் திருவண்ணாமலை முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடி காணப்படும். நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தற்போது முதலே சிவாலயங்கள், முருகப்பெருமான் கோயில்கள் தயாராகி வருகின்றனர்.


கார்த்திகை தீப நன்னாளில் அதிகாலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலையில் மகா தீபம் மலையில் ஏற்றப்படும். இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். கோயிலிலும், மலையிலும் ஏறுவதற்கு பக்தர்கள் அலைமோதும்.

ஆன்லைன் டிக்கெட் விநியோகம் எப்போது?


பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான டிக்கெட்டுகள் இணையதளம் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை நேரில் தரிசிப்பதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் டிசம்பர் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கேற்றவாறு பக்தர்கள் தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பரணி தீப தரிசனத்திற்கு 500 பேருக்கும், மகா தீப தரிசனத்திற்கு 1000 பேருக்கும் டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது பரணி தீபத்தை காண அதிகாலை 2.30 மணிக்கு மேலேயும், மகா தீபத்தை காண மாலை 3.30 மணிக்கு மேலேயும் பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

நெய் காணிக்கை:


கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உள்ளே சென்று அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு நெய் காணிக்கை வழங்க விரும்பும் பக்தர்கள் அதற்காக திறக்கப்பட்டுள்ள கவுன்டர்களில் நெய் வாங்கி அளிக்கலாம். நெய் வாங்கித் தர இயலாதவர்கள் நெய்க்கான பணத்தை காணிக்கையாக தரலாம்.


தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 4ம் தேதி தொடங்க உள்ளது. 1ம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 17ம் தேதி வரை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. தீபத்திற்கு முந்தைய பிரம்மாண்ட நிகழ்வான மகாதேரோட்டம் வரும் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது.