தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபம்(Karthigai Deepam) ஆகும். உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதை காண கோடிக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவதும், வீடுகளில் தீபங்கள் ஏற்றுவதும் என்று கார்த்திகை தீபம் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் களைகட்டும்.
கார்த்திகை தீபம் எப்போது?
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் வரும் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபம் என்றாலே விளக்குகளும், அதன் ஒளியில் ஜொலிக்கும் வீடுமே நம் நினைவுகளுக்கு வரும். கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், தீப விளக்குகளை எப்படி ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? என்று கீழே விரிவாக காணலாம்.
எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தீபத்திற்கு ஏற்றப்படும் விளக்குகளை நவக்கிரகங்கள் 9, ராசிகள் 12 மற்றும் நட்சத்திரங்கள் 27க்கும் ஏற்றுவது மொத்தம் 48 விளக்குகள் ஏற்றுவது நல்லது ஆகும். பொதுவாக வீடுகளில் விளக்கு ஏற்றுவதால் மகாலட்சுமி நம் வீட்டில் குடியேறுவாள் என்பது ஐதீகம் ஆகும். தீபத்திருநாளில் வீடுகளில் விளக்கேற்றும் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிட்டும் என்பது நம்பிக்கை ஆகும்.
விளக்குகள் ஏற்றுவது எப்படி?
- வீட்டின் தலைவாசலில் ஏற்றும் விளக்குகளில் 2 விளக்குகள் புதியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
- தீபம் ஏற்றுவதற்காக பயன்படுத்தும் விளக்குகள் விரிசல் இல்லாமல், உடையாமல் இருப்பது மிகவும் நல்லது ஆகும்.
- கார்த்திகை தீபத்திற்கு ஏற்றும் விளக்குகளை பொதுவாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் ஏற்றுவதுதான் நல்லது ஆகும்.
- வீட்டில் இருளே இல்லாத வகையில் வீடு முழுவதும் வெளிச்சத்தில் ஒளிரும் வகையில் அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்.
- சமையல் அறை, பால்கனி, வீட்டின் முற்றம், வீடுகளில் இடப்பட்டுள்ள கோலத்திலும் விளக்குகள் ஏற்றுவது மிகவும் முக்கியம் ஆகும்.
ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரத்தில் ஏற்றப்படும் இந்த விளக்குகளை வீட்டு முற்றத்தில் 4, சமையல் கூடத்தில் 1, நடைபாதையில் 2, வீட்டின் பின்புறம் 4, திண்ணையில் 4, மாடகுழியில் 2, நிலைப்படிக்கு 2 விளக்கு, சாமி படத்திற்கு கீழே 2, கோலமிட்ட இடத்தில் 5 ஏற்ற வேண்டும்.
அகல் விளக்குகள்:
நாம் ஏற்றும் விளக்குகளை முதலில் நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த அகல் விளக்குகளை அலங்கரித்து பஞ்சு திரி, நூல் திரி வைத்து விளக்கேற்றும் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யால் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
முதல் விளக்கில் தீக்குச்சியால் ஏற்றிய பிறகு, மற்ற விளக்குகளை அகல் விளக்குகள் மூலமே ஏற்றிக்கொள்வது நல்லது ஆகும்.
உங்கள் வீடுகளில் துளசி செடி, நெல்லிக்காய் மரம், மாதுளை மரம் இருந்தால் நிச்சயம் அதற்கும் நீங்கள் விளக்கேற்ற வேண்டும். ஏனென்றால் துளசி, நெல்லி மற்றும் மாதுளை மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று குத்து விளக்கேற்றும்போது வீட்டில் செல்வ வளம் பெருகி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.